இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் சர்வதேசம் தலையிட முடியாது. கத்தோலிக்க திருச்சபை அதனை முழுமையாக எதிர்க்கிறது என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
கத்தோலிக்க ஆயர் பேரவை ஏற்பாடு செய்திருந்த விசேட செய்தியாளர் மாநாடு நேற்று கொழும்பு பேராயர் இல்லத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் நாட்டு மக்களுக்கான நத்தார் செய்தியை உத்தியோகபூர்வமாக வெளியிட்ட பேராயர் இக்காலகட்டங்களில் மேற்கொள்ளப்படும் விமர்சனங்கள் தொடர்பிலும் பதிலளித்தார்.
பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இது தொடர்பில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் மேலும் தெரிவிக்கையில்:-
சில நாடுகளில் பிரச்சினைகளை உருவாக்கி அந்நாடுகளில் தலையிடுவதற்கு வாய்ப்பாக்கிக் கொள்ளும் கைங்கரியமான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதை சுட்டிக்காட்டியதுடன் இலங்கையில் அத்தகைய செயற்பாடுகளுக்கு இடமளிக்கக் கூடாது எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
உண்மையுடனும் நம்பிக்கையுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு எமது பிரச்சினைகளை நாமே தீர்க்க முடியும். அனைத்து மதங்களின் அடிப்படையிலும் இதற்கு சிறந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையானது தொடர்ச்சியாக அவதானித்து வரும் நாட்டின் சூழலைக் கருத்திற் கொண்டே கருத்து வெளியிட்டது. மக்களின் நலன்களை நோக்கமாகக் கொண்ட வெளிப்பாடு அது. எனினும் இந்த நாட்டில் கருத்துக் கூறும் சுதந்திரம் அனைவருக்கும் உள்ளது. நாம் தெரிவிப்பதை பைபிளைப் போன்று ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று நாம் கூறவில்லை.
பலரும் பல கருத்துக்களைக் கொண்டிருக்க முடியும். எமது கருத்துக்களோடு ஒன்றுபட முடியாதிருக்கலாம். அவர்களுக்கும் ஜனநாயக சுதந்திரம் உள்ளது என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். எனினும், எமது அறிவிப்பு இந்த நாட்டின் நாம் கொண்டுள்ள அன்பின் வெளிப்பாடாகும். இந்த நாட்டில் நிலவும் சூழ்நிலை கவலைக்குரியதாகிவிடக் கூடாது என்ற நன்நோக்கிலேயே எமது வெளிப்பாடு அமைந்தது.
குறிப்பாக இந்த நாட்டின் மீதான சர்வதேச அழுத்தங்கள் தொடரக்கூடாது. எமது பிரச்சினை எமது சகோதர சமூகத்தோடுடனானது. இந்த மண்ணில் பிறந்து இந்த மண்ணில் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் சகோதர சமூகத்துடனான பிரச்சினை இது.
இந்தப் பிரச்சினையை நாம் அனைவரதும் மதங்களை அடிப்படையாகக் கொண்டு தீர்க்க முடியும். ஒருவர் ஒருவருக்கு சேறுபூசாமல் அவமானத்துக்கு உட்படுத்தாமல் பேச்சுவார்த்தையின் மூலம் இதை நிவர்த்திக்க முடியும். இப்பிரச்சினையில் சர்வதேசத்தின் தலையீட்டுக்கு இடமளிக்கக் கூடாது என்பதே எமது கருத்து. இதற்காகவே கத்தோலிக்கத் திருச்சபை அண்மையில் அறிக்கையொன்றை வெளியிட்டது.
சந்தர்ப்பவாதிகளின் விருப்பத்திற்கமைய சர்வதேச நாடுகள் உள்நாட்டுப் பிரச்சினையில் கைவைப்பதற்கு மும்முரமாக உள்ளன. எமது வீட்டுக்குள் உள்ள பிரச்சினைக்கு வெளியாரை நுழைய விடுவது மடமைத்தனமாகும்.
நாம் சமயங்களை மதிக்கும் மனிதர்களெனில் மனிதர், மனிதருக்கிடையில் நிலவும் பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் போதியளவு வாய்ப்புகள் எமக்குள்ளன. அதனை உன்னிப்பாகவும் நம்பிக்கை மிகுந்ததாகவும் செயற்படுத்துவது நமது பொறுப்பாக வேண்டும்.
ஒருவர் அவரது பக்கத்தைப் பாதுகாத்துக் கொண்டு மற்றவர் நம்பிக்கை பற்றி குறிப்பிட முடியாது. இரு பக்கத்திலுமிருந்து உண்மை நம்பிக்கை மிகுந்ததான நிலைப்பாடு அவசியமாகும். இதனைக் கருத்திற்கொண்டே நாம் எமது அறிக்கையை வெளியிட்டிருந்தோம்.
சர்வதேச அமைப்புகள் உலகில் வேறு நாடுகளிலும் தலையீடு செய்துள்ளன. இதற்காக அந்தந்த நாடுகளில் குழப்பகரமான சூழலை அவர்களே ஏற்படுத்தி அதனை வாய்ப்பாக்கிக் கொண்டுள்ளனர். இதன் மூலம், அந்த நாடுகளை முழுமையான வீழ்ச்சிக்கு உட்படுத்தியும் வருகின்றனர்.
லிபியா, சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் உள்நாட்டுப் பிரச்சினைகள் தீர்க்கப்படாத நிலையில் சர்வதேச நாடுகள் தலையிட்டு அந்த நாடுகள் மிக மோசமாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இது போன்ற நிலைமையை எமது நாட்டில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை எமக்குக் கிடையாது.
யாழ்ப்பாணம், மன்னார் மறை மாவட்ட ஆயர்களின் கருத்துகள் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பேராயர்,
அந்தந்த பகுதி மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அவர்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
உதாரணமாக எமது மீனவர்கள் சிறைக் கைதிகளாக இந்தியாவில் உள்ளனர். இவற்றில் மேல் மற்றும் வடமேல் மாகாண மீனவர்கள் உள்ளடங்குகின்றனர். அவர்கள் தொடர்பில் நாம் குரலெழுப்புகிறோம்.
இதேபோன்று வடக்கு கிழக்கில் ஆயர்கள் அவர்களுக்கு வரும் மக்கள் அழுத்தத்தின் அடிப்படையில் கருத்துக்களை வெளியிடுகின்றனர்.
அதை நாம் அரசியலாகப் பார்க்கக் கூடாது. நான் கூட அரசியலில் சம்பந்தப்படுவதில்லை. நான் எந்த அரசியல் கட்சியுடனும் சம்பந்தப்பட்டவனல்ல. எந்தக் கட்சியிலும் அங்கத்துவம் பெற்றுக் கொண்டவனுமல்ல. இது போன்றே சகல ஆயர்களும் அரசியலில் சம்பந்தப்படாதவர்களாகவே உள்ளனர்.
மக்களின் பிரச்சினைகளை பேசும்போது அதை அரசியலாகப் பார்ப்பது தவறு. மக்கள் என்னிடம் தெரிவிக்கும் பிரச்சினைகளுக்கு நாம் கவனம் எடுக்கிறோம். இதை அரசாங்கத்தினால் ஏற்க முடியாதிருக்கலாம். எனினும் அதை அரசியலாக்கிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
அதேபோன்று நாம் வெளியிட்ட ஒரு சொல் தவறாகப் பார்க்கப்படுகிறது. வாழ்விடம் என்ற பதத்தையே நாம் உபயோகித்தோம். நான் தெற்கைச் சேர்ந்தவன் இங்கு வாழும் உரிமை எனக்குள்ளது. தெற்கில் வாழும் மக்களுக்கு தெற்கு வாழ்விடம். அதேபோன்று வடக்கில் வாழும் மக்களுக்கு அதுவே வாழ்விடம்.
ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்திற்கு எவரும் போகலாம். இயல்பாகவே அங்கு வாழலாம். தெற்கில் உள்ளோர் வடக்கில் தொழில் செய்தால் அங்கு தம்மை பதிவு செய்துகொண்டு வாழ்வது இயல்பானது. இங்கு எவரும் வரக்கூடாது என எவரும் கூறினால் அது தவறானது.
எனினும் நீங்கள் இங்கு வரலாம் இங்கு வந்து தொழில் செய்யலாம் எனினும் இது எங்கள் வாழ்விடம் என்ற நிலைப்பாடு நியாயமானது. இது எம் அனைவரதும் தாய் நாடு.
பாரம்பரியமாக அந்த மக்கள் வாழும் பிரதேசத்தை அவர்களின் வாழ்விடமாகக் கொள்வதில் எந்த பிரச்சினையுமில்லை. தெற்கு சிங்கள மக்களின் வாழ்விடம் அதேபோன்று வடக்கு தமிழ் மக்களின் வாழ்விடம்.
அதேபோன்று சிங்கள மக்கள் வடக்கில் வாழ்கின்றனர். தமிழ் மக்கள் தெற்கில் வாழ்கின்றனர். இந்த நிலை மிகச் சிறந்தது. எனினும் அமைப்பு ரீதியில் மக்களை வேறுபடுத்த முனைந்தால் தான் பிரச்சினை ஏற்படும். இதைத்தான் நாமும் தெரிவிக்கின்றோம்.
புலிகள் முஸ்லிம், சிங்கள மக்களை வடக்கிலிருந்து விரட்டியது நியாயமானதல்ல. அதேவேளை அனைத்து சிங்கள மக்களும் வடக்கில் போய் குடியேற வேண்டுமென்று எம்மால் கூற முடியாது. அது இயல்பாக இடம்பெறுமானால் அதற்கு நாம் எதிர்ப்பல்ல. தனி நாடு, பூர்வீகம் என்ற கோட்பாட்டைக் கொண்டவர்கள் நாமல்ல. நாம் அந்த கோட்பாட்டை ஏற்றுக் கொள்பவர்களுமல்ல எனவும் பேராயர் மேலும் தெரிவித்தார்.
முயல்i ஆமை