இலங்கையில் நடைபெற்றது போர்க் குற்றமல்ல, அது ஒரு திட்டமிட்ட இனப் படுகொலை. இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஒத்துழைப்பும் உதவியும் இல்லாமல் இப் படுகொலை நடந்திருக்க முடியாது என்று மக்கள் தீர்ப்பாயம் தெரிவித்தது.
டில்லி செய்தியாளர் மன்றத்தில் நேற்று சனிக்கிழமை அந்த அமைப்பின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறியதாவது:
இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசும், இராணுவமும் சேர்ந்து நடத்திய இனப் படுகொலை, மனித உரிமை மீறல்கள் ஆகியவை குறித்து மக்கள் தீர்ப்பாயம் டிசம்பர் 7 முதல் 10-ஆம் தேதி வரை ஜெர்மனியில் உள்ள பிரெமன் நகரில் விசாரணை நடத்தியது.
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் டென்னிஸ் ஹேலிடே தலைமையிலான அத் தீர்ப்பாயத்தில் சர்வதேச சட்ட வல்லுநர்கள், இனப் படுகொலை வழக்குகளை விசாரிக்கும் வழக்குரைஞர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.
விசாரணையின்போது, இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலையை இந்தியா எவ்வாறு முன்னின்று நடத்தியது என்பதற்கான ஆதாரங்களை மே 17 இயக்கம் சார்பில் நாங்கள் அளித்தோம். நேரடி சாட்சிகளையும் தீர்ப்பாயம் விசாரித்தது.
இலங்கையில் இன அழிப்பு சம்பவத்தில் இந்தியா ஆயுத உதவி செய்தது, இலங்கை ராணுவத்தினருக்குப் பயிற்சி அளித்தது, தமிழர்களுக்கு எதிரான போரில் தலையிடாமல் இருப்பதற்காக சர்வதேச நாடுகளுக்கு இந்தியா நெருக்குதல் கொடுத்தது, ஐ.நா.வில் உள்ள இந்திய அதிகாரிகள் உதவியுடன் இலங்கையில் இனப் படுகொலை நடப்பதற்கான சூழ்நிலையை உருவாக்கியது உள்பட பல்வேறு தகவல்களுடன் கூடிய ஆதாரங்களை அளித்தோம்.
இந்தியாவின் மூன்று மிக முக்கிய உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் தமிழர்களுக்கு எதிரான போரை முன்னின்று வழிநடத்திச் சென்றனர் என்பதற்கான ஆதாரங்களையும் அளித்தோம்.
விசாரணையின் முடிவில், இலங்கையில் நடைபெற்றது போர்க் குற்றமல்ல, அது ஒரு திட்டமிட்ட இனப் படுகொலை. இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஒத்துழைப்பும் உதவியும் இல்லாமல் இப் படுகொலை நடந்திருக்க முடியாது என்று மக்கள் தீர்ப்பாயம் தெரிவித்தது.
இப் போரின் போது தமிழ் இன மக்கள் கொல்லப்படுவார்கள் என்பதை அறிந்தே இலங்கைக்கு இந்த மூன்று நாடுகளும் உதவியுள்ளன.
அத் தீர்ப்பில் படுகொலை செய்யப்பட்டவர்கள் ஈழத் தமிழர்கள் என்றும் அவர்கள் இலங்கையின் தேசிய இனத்தினர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தீர்ப்பு சர்வதேச அளவில் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள பெரிய அவமானமாகும்.
தேசிய இனங்கள் பிரிந்து போவதற்கான உரிமையை ஐ.நா. வழங்குகிறது. அதன்படி, ஈழத் தமிழர்கள் எதிர்காலத்தில் தனி நாடு அமைப்பதற்கான உரிமைக்கு மக்கள் தீர்ப்பாயம் அளித்துள்ள இத் தீர்ப்பு முக்கியமானதாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம்.
இனப் படுகொலை நடைபெற்ற பிறகும் இந்தியாவின் பங்களிப்பு தொடர்கிறது. அங்குள்ள பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை செய்வது, தமிழர்களின் நிலத்தை அபகரிப்பது, உளவியல் ரீதியாக துன்புறுத்துவது உள்ளிட்டவற்றை இங்கை அரசு தொடர்ந்து நடத்தி வருகிறது.
அதனால்தான், இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையாக, போர்க்குற்றமாக மட்டும் அதைப் பார்க்காமல், இன அழிப்பு நடவடிக்கைக்கு எதிரான குற்றமாகப் பார்த்து, சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்துகிறோம் என்றார்.


























உலக தமிழர் நலனை காக்க ஈழமும்,தமிழ் நாடும் சேர்ந்து ஐக்கிய தமிழர் நாடாக அமைய வேண்டும்.
இல்லை இல்லை எல்லாம் பொய் என்று துரோக இந்தியாவும் இலங்கை சொல்லத்தான் போகிறது.