தமிழர்களை ஒடுக்க வேறு­ வடி­வங்களில் முயற்சி: கிழக்கு மாகாண சபை உறுப்பினர் குற்றச்சாட்டு

karunakaram_003ஆயுதங்களினால் தமிழ் மக்களை அடக்க முயன்றவர்கள், தற்போது, வேறு வடிவங்களில் அவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டு வருவதை அவதானிக்க முடிகின்றதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

குருக்கள் மடம் கலைவாணி வாசகர் வட்டத்தினால் சிறுவர் நூலகத் திறப்பு விழா நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தெரிவிக்கையில்,

ஆயுதப் போராட்டம் முடிந்து இந்த நாட்டில் ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள இந் நிலையிலும் கூட இந்த வரவு செலவுத் திட்டத்தில் அதிகமான நிதி பாதுகாப்புக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு நகர அபிவிருத்தி நிதி திட்டமிடல் பொருளாதார அபிவிருத்தி ஆகிய நான்கு அமைச்சுக்களுக்கும் 47 வீதமான நிதியினை ஒதுக்கி இந்த அரசாங்கம் தமது குடும்ப அரசியலுக்கு கிட்டத்தட்ட 50 வீதமான நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது.

ஆனால் எல்லைப் புறங்களிலுள்ள மக்கள் இன்று பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பது யானைகளினால். யானைகள் கடந்த யுத்த காலத்தில் எமது மக்கள் குடியிருப்புக்களுக்கு வந்து தாக்கவில்லை உயிர்களை அழிக்கவில்லை ஆனால் பெரும்பான்மை இனத்தவர்கள் யானைகளை பயன்படுத்தி பாரிய வேலைகளை செய்து வந்துள்ளார்கள். அந்த பாரிய வேலைகளை செய்வதற்கு தற்போது இயந்திரங்கள் வந்துள்ளன.

யானைகளுக்கு உரிய வேலைகள் இல்லாமல் போய்விட்டன. இவ்வாறான யானைகளை லொறிகளிலே ஏற்றிக் கொணர்ந்து நமது தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் இறக்கி விட்டுச் செல்கின்றார்கள். கழுத்திலும் கால்களிலும் சங்கிலிகளோடுதான் இவ்வாறு யானைகள் நமது மக்கள் குடியிருப்புக்களை நோக்கி வந்து தாக்குதல்கள் நடத்துகின்றன.

இது ஒருபுறமிருக்க மட்டக்களப்பு வாவியில் கடந்த காலங்களில் முதலைகளில்லை மீனவர்கள் சுதந்திரமாக தமது மீன் பிடித் தொழில்களில் ஈடுபட்டிருந்தார்கள். ஆனால் அண்மையில் பெரும்பான்மையினத்தினைச் சேர்ந்தவர்கள் ஆயுதப்படைகளின் உதவியுடன் லொறிகளில் முதலைகளை ஏற்றிக் கொணர்ந்து சேனைக்குடியிருப்பில் அமைந்துள்ள கிட்டங்கி பாலத்தில் வைத்து ஆற்றினுள் முதலைகளை கொட்டி விட்டுச் சென்றுள்ளதனை நம் மக்கள் கண்ணூடாகக் கண்டுள்ளார்கள்.

இதனால் மட்டக்களப்பு வாவியில் முதலைகளின் தாக்கங்களும் அதிகரித்துள்ளன. மீனவர்கள் சுதந்திரமாக தமது ஜீவனோபாயத்தினை மேற்கொள்ள முடியாதுள்ளார்கள். தமிழ் மக்களை ஆயுதங்களினால் ஒடுக்க முயன்றவர்கள் தற்போது அதனை வேறு வடிவத்தில் கொண்டு வருகின்றார்கள். ஆனால் அது இயலாத காரியம் என்பதனை அவர்கள் அறியவில்லை. எமது விடுதலைப் போராட்டம் இன்று மௌனிக்கப்பட்டிருந்தாலும் எமக்கான நிரந்தரத் தீர்வு இன்னும் கிடைக்கவில்லை.

எமக்கான நிரந்தரத் தீர்வு கிடைக்க வேண்டுமாக இருந்தால் ஒற்றுமையாக நாம் அனைவரும் செயற்பட வேண்டும்.

எமது மக்களுக்காக ஐக்கிய நாடுகள் சபையும் மேற்குலக நாடுகளும் மற்றும் புலம்பெயர் தமிழ் மக்களும் தான் இன்றைய நிலையில் குரல் கொடுக்கின்றார்கள்.

கிழக்கில் தமிழ் முஸ்லிம் எல்லைக் கிராமங்களில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை முஸ்லிம் சகோதரர்கள் கபளீகரம் செய்கின்றார்கள். இதன் உச்சக் கட்டம்தான் கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதற்கு இந்த முஸ்லிம் அரசியல் வாதிகள் எதிர்க்கின்றார்கள். இலங்கை சுதந்திரமடைந்த காலமிருந்து இலங்கைத் தமிழ் மக்களாகிய நாம் இன்றும் இரண்டாம் தரப் பிரஜைகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

இன்றைய நிலையில் தமிழ் மக்களுக்கு ஒரு எதிரியல்ல ஒன்றுக்கு மேற்பட்ட எதிரிகள் உள்ளார்கள். இந்த எதிரிகளை எதிர்த்து நின்று வெற்றிபெற தமிழ் மக்கள் யாவரும் ஒற்றுமையுடன் செயற்பட்டு இலங்கை நாட்டில் முதல் பிரஜைகளாக திகழ வேண்டும்.

தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய நிரந்தர அரசியல் தீர்வுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மாத்திரம் தான் இந்த அரசு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்றார்.

TAGS: