சர்வதேச அழுத்தங்களின் காரணமாகவே ஜனாதிபதி கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளார். அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் வெளிப்படைத் தன்மையில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வடமாகாண சபைக்கு அதிகாரங்களை வழங்கும் வரை அரசாங்கத்தை நம்பத் தயாரில்லை எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இதுவரை காலமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்துக்களையோ வட மாகாண பிரச்சினைகள் தொடர்பிலோ எவ்வித அக்கறையும் காட்டாத அரசாங்கம் இப்போது தமிழ்த் தேசியக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் பேசத் தயாராகியுள்ளதென்றால் அதற்கு சர்வதேச அழுத்தங்களே காரணமாகும்.
இலங்கையில் தமிழர்களுக்கு நடைபெற்ற இப்போதும் இடம்பெற்று வரும் அநீதிகள் தொடர்பில் இன்று சர்வதேச நாடுகள் அறிந்து கொண்டுள்ளன.
நாம் அரசாங்கத்திடம் தனி நாட்டுக் கோரிக்கையையோ, தனிப்பட்ட விசேட உரிமைகளையோ கோரவில்லை. எமது மக்களுக்கான உரிமைகளையும், வட மாகாணத்திற்கான சுதந்திரத்தையுமே கோரி நிற்கின்றோம்.
எனினும் இவ்வளவு காலமும் விளங்கிக் கொள்ளாத எமக்கு நிவாரணம் வழங்காத அரசாங்கம் இப்போது பேச்சுவார்த்தைக்கு அழைப்பதன் நோக்கம் என்ன? சர்வதேசத்தின் அழுத்தமே இதற்குக் காரணம்.
ஜனாதிபதியின் பேச்சிலோ, அரசாங்கத்தின் செயற்பாட்டிலோ எந்தவொரு வெளிப்படையான தன்மையுமில்லை. ஜனாதிபதியின் பேச்சினை நம்பி தமிழ் மக்களே மேலும் காயப்படுத்த நாம் தயாராகவுமில்லை.
மேலும், வட மாகாண சபையினை ஆரம்பித்து நான்கு மாத காலமாகின்றது. எனினும், இன்று வரையில் வட மாகாண சபை தொடர்பிலான பிரச்சினைகளை ஜனாதிபதி தீர்க்கவில்லை.
வட மாகாண தமிழ் மக்களின் வாழ்க்கை இன்றும் இராணுவ அதிகாரத்தின் கீழேயே காணப்படுகி்னறது. அனைத்து மக்களாலும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சரை விடவும் எவரும் ஆதரிக்காத ஆளுநருக்கே அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
வட மாகாணத்தில் கோவில்கள், பாடசாலைகள் மற்றும் வீடுகள் உடைக்கப்படுகின்றன. தமிழ் ம்ககளின் காணிகளை இராணுவத்தினர் அபகரித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இவை எதையும் இன்றுவரையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கவனத்திற் கொள்ளவில்லை.வட மாகாண சபை இப்போது கேள்விக்குறியானதொரு நிலையில் உள்ளது.
ஜனாதிபதி எம்முடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக முன்னர் வட மாகாணத்தின் பிரதான பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். வெகு விரைவில் ஆளுநரையும், இராணுவத்தையும் வெளியேற்றி வடக்கில் சிவில் ஆட்சியினை அமைக்க வேண்டும்.
வடக்கு மாகாண தமிழ் மக்களுக்கான உரிமைகளை வழங்கி, சுதந்திரமானதொரு வாழ்க்கையினை ஏற்படுத்தி வட மாகாண சபைக்கான அதிகாரங்களை வழங்கும் வரையில் நாம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினை நம்பப் போவதில்லை. அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையிலும் எவ்வித நம்பிக்கையுமில்லை என்றார்.
சம்பந்தனாரே ராசசன் விரிக்கும் சூல்ச்சி வலையில் மாட்டிக்காதே,