அரசின் போர்க்கால இழப்பு கணக்கெடுப்பை ததேகூ நிராகரிப்பு

tna_vavuniyaஇலங்கையில் போர்க்கால இழப்புகள் தொடர்பான புள்ளிவிபரத் திணைக்களத்தின் கணக்கெடுப்பை முற்றாக நிராகரிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் தலைவர்கள் வவுனியா நகரசபையில் கூடி இன்று செவ்வாய்க்கிழமை நடத்திய உயர்மட்டக் கூட்டத்தின்போதே, இந்தக் கணக்கெடுப்பை நிராகரிக்கத் தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இதனிடையே, இனப்பிரச்சனை தீர்வு விடயத்தில் தற்போதைய நாடாளுமன்றத் தெரிவுக்குழு நம்பகத்தன்மை அற்றது என்றும் அதன்மூலம் நியாயமான அரசியல்தீர்வை எட்டமுடியாது என்றும், காலப்போக்கில் நிலைமைகளை அவதானித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடி முடிவெடுக்கும் என்றும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இன்றைய கூட்டத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபையின் முதலமைச்சர், மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்.

ஆயினும், வன்னி மாவட்ட நாடாளுன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம் ஆகியோர் சமுகமளித்திருக்கவில்லை.

‘குறிப்பாக காணி அபகரிப்பு, இராணுவ பிரசன்னம், பெண்கள் விவகாரம் ஆகிய விடயங்கள் குறித்து கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் கருத்துக்கள் பரிமாறினர். குறிப்பாக புள்ளி விபரத் திணைக்களம் தற்போது சேகரித்து வருகின்ற தகவல் சேகரிப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முற்றாக நிராகரிப்பதாக இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது’ என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.

விக்னேஸ்வரன் ஊடவியலாளர் சந்திப்பில் இல்லை

 

யாழ்ப்பாணத்திற்கான இரணைமடு குடிநீர் விநியோகத் திட்டம் பற்றி நிபுணர்குழு அமைத்து முதலமைச்சர் ஆராய்வார்

 

இறுதியாக நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். ஆனால் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கலந்து கொண்டிருக்கவில்லை.

வலிகாமம், சம்பூர் உட்பட பல்வேறு பிரதேசங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும். இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட்டு, மக்களுக்கு ஏற்படுகின்ற அசௌகரியங்கள் குறைக்கப்பட்டு, பெண்களுக்கு ஏற்படுகின்ற ஆபத்துக்கள் நீக்கப்பட்டு, மக்கள் தொழில் செய்வதற்கு இடையூறாக கொண்டு வரப்பட்டுள்ள பல தடங்கல்கள் நீக்கப்பட வேண்டும் போன்ற முடிவுகளும் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரத்திற்குள் இருக்கின்ற சில உள்ளுராட்சி மன்றங்களில் வரவுசெலவுத் திட்டங்களைத் தோற்கடிப்பதற்காக எதிர்த்து வாக்களித்த கட்சி உறுப்பினர்களை கட்சியில் இருந்தும்- உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்குவது உட்பட கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த உயர்மட்டக் கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

சர்ச்சைகளை கிளப்பியுள்ள ‘இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான’ குடிநீர் விநியோகத் திட்டம் தொடர்பாக இந்தக் கூட்டத்தின்போது ஏதேனும் தீர்மானிக்கப்பட்டுள்ளதா என கேட்டபோது, ‘அந்த விடயம் சம்மந்தமாக முதலமைச்சர் ஒரு நிபுணர் குழுவை நியமித்து அவர்களிடமிருந்து ஒரு அறிக்கையை பெற இருக்கின்றார். அந்த அறிக்கை வந்தபிறகு அந்த விடயம் சம்மந்தமாக மேலதிகமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு முடிவெடுக்கப்படும்’ என்று சம்பந்தன் கூறினார். -BBC

TAGS: