தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நேர்மையான பேச்சுவார்த்தைக்கு கட்சி பேதமின்றி சகலரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அதற்கான பங்களிப்புகளை வழங்க தனிப்பட்ட வகையில் தான் தயாராக இருப்பதாகவும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பல அரசாங்கங்களின் கீழ் சர்வக் கட்சி பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. தமிழ் தலைவர்களுடன் நேர்மையான பேச்சுவார்த்தைகளை நடத்த அரசியல் தலைவர்களுக்கு தைரியம் இருக்கவில்லை என்பதால் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை.
தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதை தாமதிப்பதால், நாடு சர்வதேச ரீதியில் பல பிரச்சினைகளை எதிர்நோக்க காரணமாகி விடும்.
தேசியப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காண கட்சி ரீதியான மனப்பான்மைகளை புறந்தள்ளி விட்டு ஒன்றிணைய வேண்டும் என சகல அரசியல் தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க பல தரப்பினர் முயற்சித்து வருகின்றனர்.
நாடு ஆபத்தில் விழும் வரை காத்திருக்காது சகலரும் அதற்கு முன்னர் வழிப்படைய வேண்டும். தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் மத விழுமியங்கள் மூலம் நாம் கற்றுக்கொண்டது என்ன?
தென் பகுதி சமூகம் தமிழ் மக்களை நடத்திய விதமும், பிரபாகரன் கடைபிடித்த வழிமுறையையும் ஒரே விதமாக விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்றார்.