இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் இலங்கை அரசாங்கம் அமைத்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு நம்பகத்தன்மை அற்றது என்றும், அதில் கலந்துகொள்ளப் போவதில்லை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அண்மையில் எடுத்திருந்த தீர்மானத்தை அரசாங்கத் தரப்பு கடுமையாக விமர்சித்துள்ளது.
சர்வதேச அரசியல் லாபங்களை கணக்கில் கொண்டே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, உள்நாட்டுத் தீர்வுக்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அண்மையில் விடுத்திருந்த திறந்த அழைப்பை நிராகரித்திருப்பதாக ஆளும்கட்சியின் தலைமைக் கொறடா அமைச்சர் அமைச்சர் தினேஸ் குணவர்தன தமிழோசையிடம் தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தெரிவுக்குழு அரசியலமைப்பின் 13-ம் திருத்தத்தைப் பற்றி மட்டுமே ஆராயும் நோக்கம் கொண்டது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை கருதுவது ‘சிறுபிள்ளைத் தனமானது’ என்றும் தினேஸ் குணவர்தன கூறினார்.
வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என்று ஜனாதிபதி வாக்குறுதி அளித்திருந்த சந்தர்ப்பத்தில், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறிவந்ததையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுமாதிரி நடந்து கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் அல்ல இது. ஜனாதிபதி வடக்கு மாகாணசபையின் தேர்தலை நடத்தி தனது அரசாங்கத்துக்கே சாதகமற்ற சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்வார் என்று அவர்கள் நம்பியிருக்கவில்லை. ஆனால் தேர்தல் நடந்து, இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே மாகாணசபையின் ஆட்சியதிகாரம் கிடைத்துள்ளது என்றார் அமைச்சர் குணவர்தன.
‘சர்வதேச ஒட்சிசனில் உயிர்வாழும் தரப்பினர்’
ஆனால், கடந்த காலங்களில் அமைந்த இவ்வாறான நாடாளுமன்றத் தெரிவுக்குழுக்களும் ஆணைக்குழுக்களும் முன்வைத்த பரிந்துரைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுகிறதே என்று தமிழோசை அமைச்சரிடம் கேள்வி எழுப்பியது.
1947ல் நிலைமை இப்படித்தான், 52ல் இப்படித்தான் என்று வரலாற்றை முழுவதுமாக புரட்டி புரட்டி பேசமுடியும். ஆனால் ஜனாதிபதி நாட்டிலுள்ள எல்லா தரப்பினரையும் இணைந்து பணியாற்றுவதற்காக வருமாறு திறந்த அழைப்பை விடுத்திருக்கிறார்.
அன்று விடுதலைப்புலிகளின் கொடூரங்களுக்கு மத்தியில் அமைதியாக இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமைப்பினர், இன்று பல்வேறு சமூக, பொருளாதார அபிவிருத்திகளுக்கு மத்தியிலும் மௌனம் காக்கின்றனர் என்று பதிலளித்தார் அமைச்சர்.
இலங்கை அரசாங்கத்தின் மீது சர்வதேச ரீதியிலான அழுத்தத்தங்களை சுமத்த இதனை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தியே, ‘சர்வதேச ஒட்சிசனில் உயிர்வாழ்கின்ற தரப்பினர் இந்த தெரிவுக்குழுவை எதிர்க்கின்றனர் என்றும் இலங்கை அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.
இந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு 13-ம் திருத்தத்துக்கும் அப்பால்சென்று தீர்வுத்திட்டம் பற்றி ஆராயுமானால் அதில் கலந்துகொள்வதுபற்றி ஆராயமுடியும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறுகிறது. 13-ம் திருத்தம்பற்றி மட்டும் பேசும் இப்படியான தெரிவுக்குழுவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் நியாயம் இருக்கிறது தானே என்று தமிழோசை வினவியது.
இந்தத் தெரிவுக்குழு 13-ம்திருத்தம் பற்றி மட்டும் பேசுகிறது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு சொன்னால் அது சிறுபிள்ளைத் தனமானது.
அரசியலமைப்பின் ஏதாவது பிரிவு பற்றி மட்டும் பேசுவதற்காக இந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்படவில்லை என்றும் கூறினார் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இடம்பெறுகின்ற முக்கிய அமைச்சரான, அரசாங்கக் கட்சியின் தலைமை கொறடா தினேஷ் குணவர்தன.