சர்வதேச நாடுகளை தம் பக்கம் இழுக்க அரசாங்கமும் தமிழ் கூட்டமைப்பும் முனைப்பு!

tna_govtஎதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள  ஐநா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடருக்கு முன்னர் சர்வதேச நாடுகளை தம் பக்கம் இழுப்பதற்கான  நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கமும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் முனைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை அரசாங்கம், அமைச்சர்கள் மட்ட குழுக்களை சர்வதேச நாடுகளுக்கு அனுப்பி, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் அதிகமானவற்றை நிறைவேற்றியிருக்கின்றோம். சிலவற்றை முன்னெடுப்பதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒத்துழைப்பு தேவை என்று பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பும், ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடருக்கு முன் சர்வதேச நாடுகளுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கின்றது.

காணிகள், மீள்குடியேற்றம், காணாமல் போனோர், இராணுவ பிரசன்னம் ஆகிய விடயங்களில் கவனம் செலுத்த அரசாங்கம் தவறிவிட்டது. உண்மை நிலையை சர்வதேசத்துக்கு சொல்ல வேண்டும்.

அரசாங்கம் இந்த விடயங்களில் மேலும் தாமதித்தால் அமெரிக்காவும் பிரித்தானியாவும் சர்வதேச குற்றவிசாரணையை நடத்த நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லியிருக்கின்றன என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

மேற்படி விடயங்களில் கவனம் செலுத்தி அவற்றை நிறைவேற்ற அரசாங்கம் தவறிவிட்டது. இது குறித்து நாம் ஐக்கிய நாடுகள் சபைக்கும் சர்வதேசத்துக்கும் எடுத்துக் கூறுவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்த மாதம் இலங்கை வரவுள்ள அமெரிக்க துணைச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வாலையும் சந்திக்கும் நோக்கம் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு உள்ளது என்றும் சுரேஷ் எம்.பி மேலும் கூறினார்.

TAGS: