சர்வதேச அழுத்தங்களிலிருந்து மீள விரைவில் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது மிகவும் அவசியம். அரசியல் தீர்வைக் காண்பதற்கு ஆளும்தரப்பும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் நெகிழ்வுத் தன்மையுடன் செயற்படவேண்டியது மிக அவசியமாகும் என்று மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
உலகில் கடந்த காலங்களில் சமாதானம் அடையப்பெற்ற நாடுகளில் அனைத்துத் தரப்பினரும் இவ்வாறு நெகிழ்வுத் தன்மையுடனும் விட்டுக்கொடுப்புடனுமேயே செயற்பட்டுள்ளனர். அதற்கு சிறந்த உதாரணமாக தென்னாபிரிக்காவை குறிப்பிட முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு செயற்பாடுகள் மற்றும் அரசாங்கம் மற்றும் கூட்டமைப்பு ஆகியவற்றின் நகர்வுகள் தொடர்பில் விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அமைச்சர் இந்த விடயம் குறித்து மேலும் கூறியதாவது;
தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதன் மூலமே நாட்டின் சிறப்பான எதிர்காலத்தை உறுதிபடுத்த முடியும். மற்றும் அரசியல் ஸ்திரமிக்க நாடாக இலங்கையை உருவாக்க முடியும்.
எனவே விரைவாக நாட்டின் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக்காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபடவேண்டியது அவசியமாகும்.
அந்தவகையில் அரசியல் தீர்வை எட்டுவதற்கான சிறந்த இடமாக பாராளுமன்றத் தெரிவுக்குழுவே காணப்படுகின்றது.
எனவே பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வருவதன் மூலம் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் காணலாம்.
ஆனால் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வரமாட்டோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறிவருகின்றது. நம்பகத்தன்மை தொடர்பான விவகாரமே இதற்கு காரணமாக கூறப்படுகின்றது.
கூட்டமைப்புக்கு சந்தேகங்கள் இருக்கலாம். எனவே கூட்டமைப்பு நம்பிக்கை கொள்ளும் வகையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைய வேண்டியது அவசியமாகும்.
அதேநேரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நெகிழ்வுத் தன்மையுடன் தேசிய பிரச்சினை தீர்வு விவகாரத்தில் செயற்பட வேண்டியது அவசியமாகும். எனவே அரசாங்கம் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும்.
காரணம் ஒரு பிரச்சினைக்கு தீர்வை நோக்கி செல்லும்போது அங்கு விட்டுக் கொடுப்புக்கள் என்பது தேவையாகும். எனவே தேசிய பிரச்சினைக்கான தீர்வு செயற்பாட்டு விடயத்தில் அரசாங்கமும் கூட்டமைப்பும் தமது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும்.
அதாவது கூட்டமைப்புக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும் என்பதுடன் கூட்டமைப்பும் நெகிழ்வுத் தன்மையுடன் செயற்படவேண்டும்.
உலகில் பல நாடுகளில் சமாதானம் அடையப் பெற்றுள்ளது. அவ்வாறு அடையப் பெற்ற சமாதானமானது விட்டுக் கொடுப்புக்கள் மற்றும் நெகிழ்வுப் போக்குகளின் மத்தியிலேயே இடம்பெற்றுள்ளது.
இது 50 வருட கால பிரச்சினையாகும். எனவே இதில் கடினங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் அவற்றை நாங்கள் வெற்றிக்கொண்டு பயணிக்க வேண்டியது அவசியம்.
விரைவில் அரசியல் தீர்வை காணும் பட்சத்திலேயே சர்வதேச அழுத்தங்களிலிருந்து மீள முடியும். அவ்வாறு அடையப் பெறும் தீர்வுத் திட்டமானது அனைத்து மக்களையும் கௌரவப்படுத்துவதாக அமையவேண்டும்.
எனவே அரசியல் தீர்வை நோக்கி பயணிக்கும் பயணத்தில் அனைவரும் தமது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டியது அவசியமாகும் என்றார்.