மலையகத் தமிழர்கள் காணி பெறுவதை அரசு விரும்பவில்லை

sri-lanka_linehousesஇலங்கையில் மலையகத் தமிழர்கள் சொந்தக் காணிகளைப் பெற்றுவிடக்கூடாது என்ற இனவாத நோக்கத்துடன் அரசாங்கம் செயற்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன் குற்றஞ்சாட்டுகிறார்.

தேயிலை மீள்நடுகை நடவடிக்கையிலும் அரசாங்கத்திடமிருந்து ஆக்கபூர்வமான- செயற்திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை என்றும் அவர் கூறுகின்றார்.

சுமார் ஆறு லட்சம் ஏக்கர் தேயிலைக் காணியில், சுமார் இரண்டு லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் பரப்பிலுள்ள தேயிலைச் செடிகளை பிடுங்கிவிட்டு புதிதாக மீள்நடுகை செய்ய வேண்டியிருப்பதாக யோகராஜன் தெரிவித்தார்.

ஆனாலும் வெறும் 400 ஏக்கர் பரப்பில் மட்டுமே மீள்நடுகை செய்வதற்குப் போதுமான 500 மில்லியன் ரூபா நிதியையே அரசாங்கம் வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கியிருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.

தொழிலாளர்களுக்கு தலா இரண்டு ஏக்கர் காணியை பிரித்தளித்து, அதன்மூலம் உற்பத்திச் செலவைக் குறைத்து, தேயிலை உற்பத்தியை பெருக்குவது மட்டுமன்றி- தொழிலாளர்களுக்கும் உதவமுடியும் என்பதே பொருத்தமான நடவடிக்கை என்று அரசாங்கத்திடம் யோசனை முன்வைத்துள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

தேயிலை விவசாயிகளுக்கு மாடிவீட்டுத் திட்டம்?

 

தேயிலைத் தோட்டங்களில் தோழிலாளர்களின் குடியிருப்புகள் பல தசாப்தங்களாக மிக மோசமான நிலையிலேயே இருக்கின்றன

 

இதனிடையே கடந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின்போது, தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா 10 பேர்ச்சஸ் (சுமார் 253 சதுர மீட்டர்) காணியை வீடமைப்புக்காக ஒதுக்குவதாக ஜனாதிபதி மலையக தோட்ட மக்களுக்கு வாக்குறதி அளித்திருந்த போதிலும், இம்முறை வரவுசெலவுத் திட்டத்தில் அந்த வாக்குறுதி மீறப்பட்டுவிட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு தனித்தனி வீடுகளுக்குப் பதிலாக 50 ஆயிரம் தொடர்மாடி வீடுகளை அமைத்துக் கொடுக்கவுள்ளதாக வரவுசெலவுத் திட்டத்தில் அரசாங்கம் கூறியிருப்பதன் பின்னணியில், தோட்டத் தொழிலாளர்களுக்கு காணியுடன் வீடு கிடைக்கக் கூடாது என்ற இனவாத நோக்கமே இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

‘விவசாயிகளுக்கு நிலமே ஆதாரம். தேயிலைத் தொழிலாளர்களும் விவசாயிகளே என்றபடியால், அவர்களுக்கு மாடிவீடு வழங்குவது ஏற்புடையதா’ என்றும் யோகராஜன் எம்.பி. கேள்வி எழுப்பினார்.

ஆனால், அரசாங்கத்தின் பங்காளிகளாக இருக்கின்ற மலையகத்தின் பிரதான அரசியல்கட்சிகள் இந்த வீடமைப்பு முறையின் பாரதூர தன்மையைப் புரிந்துகொள்ளாமல் அரசாங்கத்தை நாடாளுமன்றத்தில் பாராட்டிப் பேசியுள்ளதாகவும் நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். -BBC

TAGS: