ராதிகா சிற்சபேசன் எம்.பியை கைது செய்ய சிறீதரன் எம்.பியின் அலுவலகம் சென்ற குடிவரவு அதிகாரிகள் – யாழிலும் புலனாய்வுத்துறையினர் தேடுதல் வேட்டை

Mp_sere_Rateka_mpஇன்று மதியம் 13.00 மணியளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் கிளிநொச்சி அலுவலகத்திற்கு சென்ற பொலிசார் ராதிகா சிற்சபேசன் இருக்கிறாரா என்ற விசாரணையை நடத்தி உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் உறுதிப்படுத்தினார்.

இலங்கை குடிவரவு குடியகல்வு அதிகாரி ரணவீர தலைமையிலான பெண் பொலிசார் இருவர் கொண்ட குழுவே ராதிகாவினுடைய இலங்கைப் பயணம் குறித்த கேள்விகளை கேட்டதாகவும், அது குறித்து எதுவும் தமக்கு தமக்கு தெரியாது என அவர் கூறியதாகவும் சிறீதரன் எம்.பி. தெரிவித்தார்.

ராதிகா சிற்சபேசன் இங்கு இருப்பதாக தகவல் கிடைத்தது என்றும், அவ்வாறு இருந்திருந்தால் கைது செய்யப்பட்டிருப்பார் என வந்த குடிவரவு குடியகல்வு அதிகாரி ரணவீர தெரிவித்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மேலும் தெரிவித்தார்.

இந்த நிலையில் அங்கிருந்து வெளியேறிய குடிவரவு அதிகாரிகள் யாழ்ப்பாணத்தில் ராதிகா தங்கியிருந்த இடம் எனக் கருதப்படும் பகுதியில் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டாம் இணைப்பு

யாழ்.குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் தொடர்பான தகவல்களை பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் இன்று தீவிரமாக தேடியுள்ளனர்.

கடந்த 28ம் திகதி யாழ்.குடாநாட்டிற்கு வருகை தந்திருந்த கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழத்தமிழருமான ராதிகா சிற்சபேசன் நேற்றய தினம் தனது சொந்த ஊரான மாவிட்டபுரத்திற்குச் சென்றிருந்ததுடன், வலி, வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினால் இடம்பெயர்ந்த மக்களையும் சந்தித்திருந்தார்.

இந்நிலையில் இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்திற்குச் செல்லவிருந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் அலுவலகத்திற்குச் சென்றிருந்த பயங்க ரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் மற்றும் குடிவரவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளர்.

எனினும் அவர் அங்கே இல்லாத நிலையில், யாழ்.நகரில் அவர் தங்கியிருந்த டில்கோ விடுதிக்குச் சென்றிருந்த அவர்கள் ராதிகா தொடர்பான தகவல்களை கேட்டுள்ளதுடன், அவர் எதிர்வரும் முன்றாம் திகதி வரையில் விடுதியில் அறை ஒப்பந்தம் செய்துள்ளதை அறிந்து கொண்டுள்ளனர். ஆனால் அவர் அந்த நேரம் விடுதியில் இல்லாமையினால் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸ் மற்றும் குடிவரவு அதிகாரிகள் நீண்டநேரம் விடுதி வளாகத்திற்குள் நின்றிருந்ததுடன், வீதி முழுவதும் படைப்புலனாய்வாளர்களின் நடமாட்டமும் அதிகரிக்கப்பட்டிருந்தது.

எனினும் இந்தச் செய்தி எழுதப்படும் வரையில் அவர் கைது செய்யப்பட்டதாக எவ்விதமான தகவல்களும் கிடைக்கப் பெறவில்லை.

TAGS: