தமிழ் தேசிய இனம் எதிர்பார்த்த அளவுக்கு அரசியல் தீர்விலோ அல்லது மனித உரிமைகள் விடயங்களிலோ கணிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் எதையும் அடையாமல் 2013ம் ஆண்டு முடிவுக்கு வருகின்றது. என வடமாகாணசபை தவிசாளர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.
தமிழ் தேசிய இனம் எதிர்பார்த்த அளவுக்கு அரசியல் தீர்விலோ அல்லது மனித உரிமைகள் விடயங்களிலோ கணிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் எதையும் அடையாமல் 2013ம் ஆண்டு முடிவுக்கு வருகின்றது.
எனினும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வாக அமையாது என கருதப்படும் மாகாண சபை முறைமை ஒன்று வடக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்டு இருக்கின்றது.
இந்த கட்டமைப்பையும் முறைமையையும் எங்களுடைய அரசியல் தீர்வு நோக்கிய நகர்வின் ஜனநாயக தளமாக கொண்டு செயல்படும் எண்ணப்பாடு வலுப்பெற்று வருகின்றது.
இந்த சூழ்நிலையிலையே 2014ம் ஆண்டு பிறக்கிறது.
தமிழ் தேசிய மக்களை பொறுத்தவரையில் பல்வேறுபட்ட எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்ற வேண்டிய ஆண்டாக இந்த புதுவருடம் இருக்கின்றது.
யுத்தத்தினால் இடம்பெயர்ந்து இந்தியாவிலும் சொந்த மண்ணிலும் அகதிகளாக வாழ்கின்ற எங்களுடைய மக்கள் அவர்களது வாழ்விடங்களில் மீண்டும் குடியேற்றப்பட வேண்டும்.
தத்தமது வாழ்வாதாரங்களை தொலைத்து நிற்பவர்களுக்கு வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து தங்கு நிலை பொருளாதரத்தில் இருந்து தனித்து நிற்கும் வாழ்வாதார நிலைக்கு கொண்டு வரவேண்டும்.
அவரவர் காணிகளில் அவரவரே குடியமர வழிவகைகள் செய்யப்பட வேண்டும். தமது வாழ்வியலுக்கு விடிவு கிடைக்காதா? என்று எண்ணி ஏங்கி நிக்கும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கும், ஆதரவற்ற சிறுவர்களுக்கு, மாற்று வலுவுள்ளோருக்கும் அவரவரது வாழ்வை மேம்படுத்த வேண்டி இருக்கிறது.
விவசாயம், கைத்தொழில், மீன்பிடி போன்ற துறைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு அந்தந்த துறை சார்ந்த மக்களது பொருளாதாரம் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளது.
இந்த கனவுகள் செயலுருவம் பெறுவதற்காக எமது மக்கள் எல்லா அச்சுறுத்தல்களையும் கட்டுப்பாடுகளையும் மீறி எமக்கு வழங்கிய ஆதரவையும் ஆணையையும் முன்னிலைப்படுத்தி எமது வடக்கு மாகாண சபை செயல்படும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.
இதற்காக கிழக்கு மாகாண சபை சார்ந்த உறுப்பினர்களோடும் இணைந்து செயல்படுவதற்கான அடித்தளம் ஏற்கனவே இடப்பட்டுள்ளது.
இந்த நாட்டிலும் வெளிநாடுகளிலும் பரந்து வாழ்கின்ற தமிழ் தேசிய இனத்தின் எதிர்பார்புகளை நிறைவேற்றும் வகையில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களும் நாடளுமன்ற உறுப்பினர்களும் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து ஒருங்கிணைந்து ஒற்றுமையாக எமது அரசியல் இலக்கு நோக்கிய நகர்வில் பயணிக்க உறுதி பூண்பார்கள் என்று திடமாக நம்புகின்றோம்.
எமது இந்த முயற்சிகளுக்கு வடமாகாண சபை சார்ந்த அதிகாரிகளும், உத்தியோகத்தர்களும் மட்டுமின்றி மத்திய அரசு சார்ந்த அதிகாரிகளும், அலுவலகர்களும் சகல பொது நிறுவனங்கள் சார்ந்தவர்களும் எம்முடன் இணைந்து செயல்பட வேண்டும் வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறோம்.
இந்த சூழ்நிலையில் 2014ம் ஆண்டு மனித உரிமை தொடர்பான விடயங்களில் சர்வதேச நியாயம் கிடைக்கவும், எமது மக்களுக்கு சுபீட்சமான சதந்திரமான ஒளிமயமான வாழ்வு கிடைக்க வேண்டும் என்றும் இறைவனை பிரார்த்தித்து வடக்கு மாகாண சபையின் சார்பில் வாழ்த்துகின்றோம்.
சீ.வீ.கே.சிவஞானம்
அவைத்தலைவர்
வடக்கு மாகாண சபை