போரினால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார் ராதிகா சிற்சபேசன்

இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வந்துள்ள தமிழரான கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் வடக்கே பலதரப்பினரை சந்தித்து பேசியுள்ளார்.

 

பங்குத் தந்தை ஜெபமாலையுடன் கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன்

 

போரினால் பாதிக்கப்பட்டவர்கள், காணாமல் போயுள்ளோரின் குடும்பங்கள் உட்பட பலரை சந்தித்துள்ள அவர், அம்மக்களின் பிரச்சினைகள் கனடா அரசு மற்றும் இதர சர்வதேச சமூகத்தின் பார்வைக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார் என்று அவரை சந்தித்தவர்கள் கூறுகிறார்கள்.

மன்னார்ப் பகுதியில் காணாமல் போனவர்களின் பெற்றோர்களை ராதிகா சந்தித்து பேசவும் தாங்கள் ஏற்பாடுகளை செய்து கொடுத்ததாக பிபிசி தமிழோசையிடம் கூறினார் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் பங்குத் தந்தை இமானுவேல் ஜெபமாலை.

இலங்கையில் யுத்தம் முடிந்து பல ஆண்டுகளாகியும் இன்னும் எந்தத் தீர்வும் கிட்டவில்லை, உள்நாட்டில் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பாக்க முடியாது என அவரிடம் தாங்கள் தெரிவித்ததாகவும் ஜெபமாலை கூறினார்.

“அழுத்தம் தொடரும்”

ராதிகா சிற்சபேசன் போன்றோர் இலங்கையிலுள்ள பிரச்சினைகளை சர்வதேச சமூகத்துக்கு கொண்டு சென்று அதன் மூலம் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தாங்கள் கோரியதாகவும் அவர் மேலும் கூறினார்.

கனடா கடந்த ஆண்டு இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் கூட்டம் தொடர்பில் எடுத்த நிலைப்பாட்டுக்கு தங்களைப் போன்றோர் கொடுத்த அழுத்தமும் ஒரு காரணம் என ராதிகா கூறியதாகவும் பங்குத் தந்தை ஜெபமாலை தெரிவித்தார்.

தான் கனடாவுக்குத் திரும்பிச் சென்ற பிறகு அங்குள்ள அரசுக்கு மீண்டும் இலங்கை விஷயம் குறித்து அழுத்தம் கொடுப்பதாக உறுதியளித்துள்ளார் என்றும் அவர் கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களே ராதிகா சிற்சபேசனை மன்னார் பகுதிக்கு அழைத்து வந்தார் எனக் கூறும் ஜெபமாலை அவர்கள், அவரது பயணத்தின்போது பாதுகாப்புத் தரப்பிலிருந்து எந்த கண்காணிப்போ அல்லது இடைஞ்சல்களோ ஏற்படவில்லை என்றும் பங்குத் தந்தை ஜெபமாலை கூறினார்.

இதனிடையே இலங்கை வந்திருக்கும் ராதிகா சிற்சபேசனை இலங்கை காவல்துறையினர் கண்காணிப்பதாகவும், அச்சுறுத்தும் வகையில் நடந்துகொள்வதாகவும், அவரை கைது செய்ய முயல்வதாகவும் ஊடகங்களில் வெளியான செய்திகளை காவல்துறையினர் மறுத்துள்ளனர்.

ராதிகாவை தாங்கள் கண்காணிக்கவோ, கைதுசெய்யவோ, அச்சுறுத்தும் வகையில் நடத்தவோ இல்லை என்றும், அவரது நடமாட்டங்கள் எவையும் கட்டுப்படுத்தப்படவும் இல்லை என்றும் காவல்துறையின் பேச்சாளர் அஜித் ரோஹன பிபிசி சந்தேஷ்யவிடம் தெரிவித்தார்.

அதேபோன்று அவருக்கு எந்த பாதுகாப்பையும் தாங்கள் வழங்கவில்லை என்றும் அஜித் ரோஹன கூறினார். -BBC

TAGS: