தமிழகத்தைச் சேர்ந்த இயற்கை வேளாண்மை விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரின் இழப்பு ஈழ விவசாயிகளுக்கு இரட்டிப்புத் துயரை ஏற்படுத்தியுள்ளதாக வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில்,
இயற்கை வேளாண்மையின் ஆய்வாளராகவும், செயற்பாட்டாளராகவும், பரப்புரையாளராகவும் தமிழகம் முழுவதும் களப்பணி ஆற்றிக்கொண்டிருந்த முதுபெரும் அறிஞர் கலாநிதி கோ. நம்மாழ்வாரின் மறைவு இயற்கையை நேசிக்கும் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
வடக்கு மாகாணசபை எதிர்வரும் 18ஆம் திகதி கொண்டாடுவதற்குத் தீர்மானித்திருக்கும் உழவர் பெருவிழாவுக்கு அன்னாரையே பிரதம விருந்தினராக அழைத்திருந்தோம். தள்ளாத வயதிலும் இடையறாத பணிகளுக்கு மத்தியிலும் எமது அழைப்பை மனமுவந்து ஏற்றிருந்ததோடு, எமது விவசாயிகளுக்குச் சூழலியல் வேளாண்மை மற்றும் சேதன வேளாண்மை குறித்துப் பயிலரங்குகளை நடாத்துவதற்கும் சம்மதம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நம்மாழ்வாரது இழப்பு ஈழத்து விவசாயிகளுக்கு இரட்டிப்புத் துயரை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் விவசாயத்துறைப் பட்டதாரியான நம்மாழ்வார், ஆரம்பத்தில் அரசதுறைக்குச் சொந்தமான பயிர் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றிலேயே பணியிற் சேர்ந்தார்.
எனினும் களப்பணிகள் இல்லாமல் அங்கு மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் குறித்து அதிருப்தி கொண்ட அவர், பின்னர் அங்கிருந்து வெளியேறி வாழ்நாள் பூராவும் இயற்கை வேளாண்மையில் ஒரு களப்பணியாளராகவே வாழ்ந்து மறைந்தார்.
கரூரை அடுத்த வானகம் என்ற இடத்தில் தன்னார்வ முயற்சியாக மாதிரிப் பண்ணை ஒன்றை அமைத்து இற்றைவரை வெற்றிகரமாக நடாத்திவந்துள்ளார்.
கற்பாறைகள் நிரம்பிய அப்பூமி எந்தச்செடியும் முளைக்காது என்று கைவிடப்பட்ட நிலையில், அவர் இயற்கை வேளாண் முறையில் அப்பகுதியை மூன்றே ஆண்டுகளில் பல்லுயிர்கள் வாழும் பசுஞ்சோலையாக மாற்றிக் காண்பித்தார்.
விவசாய இரசாயனங்களை விற்பனை செய்யும் பெருந்தேசிய மற்றும் பல்தேசிய நிறுவனங்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் எவ்வித செயற்கை இரசாயனங்களையும் உபயோகிக்காமலே இயற்கை முறையில் வேளாண்மையில் அதிக விளைச்சலை அறுவடை செய்ய முடியும் என்றும், மரபணு மாற்றுப் பயிர்களுக்கு எதிராகவும் தமிழகத்தின் பட்டிதொட்டிகளிலெல்லாம் நடைப்பயணங்களின் மூலம் நம்மாழ்வார் விழிப்புணர்வு ஊட்டி வந்தார்.
ஒரு களப்போராளியாக நம்மாழ்வார் ஆற்றிய அரும்பணிகள் காரணமாகத் தமிழகத்தில் செயற்கை இரசாயன உரங்களால் மரணித்த விளைநிலங்கள் பலவும் தற்போது மெல்ல உயிர்பெறத் தொடங்கியுள்ளன.
அளவுக்கு மீறிய விவசாய இரசாயனங்களின் பிரயோகத்தால் எமது விளைநிலங்களையும் சாகடித்துக் கொண்டிருக்கும் நாமும் விரைந்து இயற்கை வேளாண்மைக்குத் திரும்ப வேண்டியவர்களாகவே உள்ளோம்.
இயற்கை வேளாண் மூதறிஞர் அமரர் கோ.நம்மாழ்வாருக்கு நாம் செய்யவேண்டிய அஞ்சலியும் அதுதான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.