தமிழ் மக்களை இரண்டாம் பிரஜையாக மாற்றி ஒடுக்க நினைக்கும் இந்த அரசாங்கத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக கனிந்துவரும் சர்வதேச சூழலை சாதகமாக மாற்றிக்கொள்ள வேறுபாடுகளை களைந்து ஒன்றுபடவேண்டிய முக்கிய காலகட்டம் ஏற்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.
வெல்லாவெளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட தும்பங்கேணி கொச்சிபாம் பகுதியில் நடைபெற்ற பரிசளிப்பு விழா மற்றும் வைத்திய முகாம் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.கிருஸ்ணபிள்ளை தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மேலும் உரையாற்றிய அவர்,
கடந்தகால யுத்தத்தின் கொடுமைகளை அனுபவித்த இந்த கிராமத்தின் தேவையை நிறைவேற்றவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.அந்தவகையில் எங்களால் முடிந்தளவான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம்.
இன்று நாங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளபோதிலும் எமது பிள்ளைகளை கற்பிக்கவேண்டிய தேவையிருக்கின்றது.நாங்கள் கற்கும்போதே எம்மை சூழவுள்ள தடைகளை உடைத்து வெளியேறமுடியும்.
எமது பெற்றோர் இன்று தொலைக்காட்சிகளுக்கு அடிமையாகும் நிலை ஏற்பட்டு வருகின்றது. இதன் காரணமாக தமது பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பிலான கவனம் குறைந்து வருவதாக அண்மைய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை மாறவேண்டும் எமது சமூகத்தினை முன்னேற்ற வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.
இன்று சர்வதேச ரீதியிலான சூழல் தமிழ் மக்களுக்கு சாதகமான நிலையினை எட்டிவருகின்றது. இந்த சாதக சூழலை சரியான முறையில் பயன்படுத்த வேண்டிய மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கடமை தமிழ் மக்களுக்கு இருக்கின்றது. குறிப்பாக இந்தவேளையில் தமிழ் மக்களின் பொறுப்புமிக்கவர்கள் தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை களைந்து ஒன்றுபட வேண்டிய காலகட்டம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பிலான அமர்வில் பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நிலையேற்படும்.
குறிப்பாக பிரித்தானியா, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையை ஏற்படுத்தக் கூடியளவுக்கு நிலைமை சென்றுள்ளது. இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு உரிய தீர்வினை வழங்காவிட்டால் அது பாரிய விளைவினை ஏற்படுத்தும்.
இது தொடர்பில் தமிழ் மக்களும் தமக்குரிய உரிமைகளை பெற்றுக்கொள்ள முனைப்புடன் செயற்பட வேண்டும். இன்று புலம்பெயர் மக்கள், மேற்கு நாடுகள் எமக்கு பக்கபலமாக இருந்து செயற்பட்டு வருகின்றன. நாங்கள் அதற்கு பலம் சேர்க்கும் வகையில் செயற்படவேண்டும்.
இன்று தமிழ் மக்களை ஒடுக்கும் வகையிலேயே இலங்கை அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. குறிப்பாக தமிழ் மக்களின் பகுதிகளில் திட்டமிட்ட குடியேற்றங்களை செய்து இனப்பரம்பலை மாற்றும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக வடக்கு கிழக்கில் இந்த நடைமுறைகளை இந்த அரசாங்கம் திட்டமிட்டவகையில் மேற்கொண்டு வருகின்றது. வடக்கில் கரும்புச் செய்கை என கூறி ஆயிரக்கணக்கான சிங்களவர்களை குடியேற்ற நடவடிக்கையெடுத்து வருகின்றது.
இதேபோன்று கிழக்கிலும் எதிர்காலத்தில் மேற்கொள்வதற்கான வாய்ப்புகளும் ஏற்பட்டுள்ளன. இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதிகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. திட்டமிடப்பட்ட வகையில் இந்த ஆக்கிரமிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்த வேண்டிய தேவை எமக்கு உள்ளது. அதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. என்றார்.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரசன்ன இந்திரகுமார் உட்பட வைத்தியர்கள் கிராம அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.