இலங்கையில் அதிகார பரவலாக்கலுக்கு எதிரான அரசாங்கத்தின் வேலைத்திட்டமாகவே திவிநெகும திணைக்களம் அமைக்கப்படுவதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டுகிறது.
அரசியல் அதிகாரத்தை மத்தியில் குவித்துக் கொள்ளும் அரசின் திட்டமே இந்த திவிநெகும சட்டத்தின் மூலம் முன்னெடுக்கப்படுவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க பிபிசியிடம் தெரிவித்தார்.
கிராமங்களில் பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறும் அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய திவிநெகும அபிவிருத்தித் திணைக்களம் நேற்று வெள்ளிக்கிழமை முதல் சட்டபூர்வமாக அதிகாரம் பெறுகின்றது.
ஓரிரு நபர்கள் தங்களின் அதிகாரப் பிடியை இறுக்கிக் கொள்வதற்கு எடுத்த அரசியல் முடிவுதான் இது’ என்று ஐக்கிய தேசியக் கட்சி பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குப் பதிலாக அரசாங்கம் இந்த சட்டத்தின் ஊடாக அரசியல் ஏதேச்சாதிகாரத்தை குவித்துக் கொள்ளவே முயன்றுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி கூறுகிறது.
மாகாண சபைகளிடம் இருந்த பல அதிகாரங்கள் இந்த சட்டத்தின் ஊடாக திருடப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கிறது.
ஆனால், இதன் மூலம் சுமார் 18 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 50 லட்சம் மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்று இந்த திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்துக்குப் பொறுப்பான அமைச்சர் பசில் ராஜபக்ச கூறுகிறார்.
இந்த திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் மூலம் தனது அதிகாரமே குறைக்கப்படுவதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.
இந்தத் திணைக்களம் அரச சேவை ஆணைக்குழுவின் கீழேயே வருவதால், அதன் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டே செயற்பட வேண்டியிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஓராண்டுக்கு முன்னர் இந்த திவிநெகும சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போது, பெரும் அரசியலமைப்புச் சிக்கல் ஏற்பட்டது.
இதன் பின்னணியிலேயே, அப்போது தலைமை நீதியரசராக இருந்த ஷிராணி பண்டாரநாயக்கவை பதவி நீக்குவதற்கான நடவடிக்கைகளும் ஆளுந்தரப்பால் முன்னெடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.