தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி நாட்டின் தேசிய பிரச்சினைக்கான தீர்வினை காண அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக, தெற்கிற்கொன்றையும் வடக்கிற்கொன்றையும் சர்வதேசத்திற்கு இன்னொன்றையும் கூறி, அரசு மக்களை ஏமாற்றி காலத்தை வீணடிக்கக்கூடாது என ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் இன்னும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். எனவே, அவர்கள் நம்பிக்கை வைத்துள்ள பிரதிநிதிகளது கோரிக்கைகளுக்கு செவிமடுக்க வேண்டும். இல்லையேல் சர்வதேச நாடுகள் இலங்கை விவகாரத்தில் தலையிடும்.
எனவே, சர்வதேச தலையீடுகளை தவிர்த்து நாட்டின் தேசியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவதே சிறந்தது எனவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பாக வினவிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நான்கு வருடங்கள் கடந்துள்ள போதும் நாட்டின் தேசிய பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை. அத்தோடு வடக்கில் முறையான சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்படவில்லை.
ஆகையினாலேயே சர்வதேச நாடுகள் இலங்கை விவகாரத்தில் தலையிடுகின்றன. அதற்கான கதவை இந்த அரசாங்கமே திறந்து விட்டுள்ளது.
வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டி ஆட்சியமைத்துள்ளது.
எனவே, அம்மக்கள் தமிழ்க் கூட்டமைப்பின் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். ஆகையால் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் செவிமடுக்க வேண்டும்.
வடக்கில் தற்போது இருக்கும் ஆளுநரை பதவி நீக்கம் செய்துவிட்டு சிவிலியன் ஒருவரை அந்தப் பதவிக்கு நியமிக்க வேண்டும் என்று கூட்டமைப்பு வலியுறுத்தியது.
ஆனால் அரசாங்கமோ அதற்கு செவிமடுக்காமல் செயற்பட்டு வருகிறது. அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளே தேவையற்ற அழுத்தங்கள் வருவதற்கு காரணமாக அமைந்துள்ளது.
அரசாங்கம் வட மாகாண மக்கள் பிரதிநிதிகளுக்கு செவிமடுத்து உடனடியாக சிவிலியன் ஒருவரை ஆளுநராக நியமிக்க வேண்டும்.அதன் பின்னர் நாட்டின் தேசிய பிரச்சினை தொர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்த வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனநாயக ரீதியான ஓர் அமைப்பு. ஆகவே, அவர்களை மதிக்க வேண்டும். என்னதான் சர்வதேச நாடுகளுடன் பேசினாலும் தமிழ் மக்களது பிரச்சினைகளை நன்கு உணர்ந்த அவர்களது பிரதிநிதிகளிடம் பேசுவதே சிறந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை பற்றி பல்வேறு விமர்சனங்கள் முன்னவைக்கப்படுகிறது. அதாவது புலிகள் காலத்தில் அவர்கள் புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே செயற்பட்டார்கள் என்று குற்றம் சாட்டப்படுகிறது.
அந்த சந்தர்ப்பத்தில் புலிகள் பலமாக இருந்தார்கள். அவர்களை மீறி செயற்பட முடியாதிருந்திருக்கும். ஜே.வி.பி. பிரச்சினை காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் கூட அவர்களுக்குப் பயந்து செயற்பட்டார்கள். எனவே அதையெல்லாம் பற்றி பேசி தற்போது பயனில்லை.
எனவே நடைமுறைக்கு சாத்தியமான வகையில் சிந்திக்க வேண்டும். இல்லையேல் நாடு படுபாதாளத்தை நோக்கிச் செல்வதை ஒருபோதும் தவிர்க்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.