முட்கம்பி வேலிகளுக்குள் இருந்து கொண்டே தன்மானத்தினை காத்தவர்கள் வடகிழக்கு தமிழர்கள்!- பா.அரியநேத்திரன்

vavu_camp_refugeesஇலங்கையில் இடம்பெற்ற 66வருட போராட்டத்தின் விளைவாக வடகிழக்கில் வாழ்கின்ற தமிழர்களின் பிரச்சினை சர்வதேச மட்டத்தில் கொண்டுவரப்பட்டு அந்த நாடுகளின் அரசியலை தீர்மானிக்கும் அளவிற்கு எமது போராட்ட வடிவங்கள் மாற்றம் பெற்று சென்றிருக்கின்றதென பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனின் நிதிஒதுக்கீட்டில் நேற்று முனைத்தீவு பிரதேசத்தில் இடம்பெற்ற விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே  பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.

வடகிழக்கில் வாழ்ந்து வரும் தமிழர்களை தம்வசப்படுத்த வேண்டும் என்பதில் இந்த நாட்டின் ஜனாதிபதி மிகவும் உறுதியாக இருந்து செயற்பட்டு வந்தார். ஆனால் அந்த எண்ணம் இன்றும் கைகூடாத நிலையிலே இருந்து கொண்டிருக்கின்றார்.

2009 மே மாதம் முள்ளிவாய்க்கால் போரை முடிவிற்கு கொண்டுவந்து விட்டோம் என்று கூறிய இலங்கை அரசாங்கம், போர் முடிந்த கையோடு 2010ல் அவசர அவசரமாக பாராளுமன்றத் தேர்தலை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்து அதற்காக வேண்டி பெரும்தொகைப் பணத்தினையும் கொட்டி இறைத்து இந்த நாட்டின் ஒட்டுமொத்த தலைவர் தான்தான் என்பதனை நிருபிப்பதற்கு அயராது பாடுபட்டு தோல்வியும் கண்டார்.

எமது மக்கள் எத்தனை துன்பங்களை சந்தித்தாலும் எமது இனம் என்றும் மாற்று சக்திகளுக்கு உட்படக்கூடாது என்பதில் குறியாக இருந்ததன் காரணமாக 2010ல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் 14 உறுப்பினர்களை மூன்றரை இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள் இருந்து கொண்டும் கிழக்கு மாகாண மக்கள் பல இன்னல்களை அனுபவித்தும் இவ்வளவு தொகையான உறுப்பினர்களை தெரிவு செய்து அரசாங்கத்திற்கு தகுந்த நேரத்தில் தகுந்த பாடத்தினை புகட்டினார்கள்.

அப்போது அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுப்பதற்காக லண்டனில் இருந்து சுப்பர்ஸ்டார்கள் வந்திறங்கினார்கள். இப்போது இவ்வாறான ஸ்டார்கள் வந்திறங்கி இருக்கின்றார்கள். இவர்கள் தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டு தமிழ் இனத்தையே பூண்டோடு அழிக்கும் செயற்பாடுகளிலே இவ்வாறானவர்கள் செயற்பட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.

இவர்களைப்போன்று எத்தனை பேர்கள் வந்திறங்கினாலும் எமது மக்கள் எமமுடன் இருந்து கொண்டு தமிழர்களுக்கு கிடைக்கும் இறுதித் தீர்வில் உறுதியாக இருந்து செயற்பட்டிருக்கின்றார்கள். இனிவரும் காலங்களிலும் அதனையே செய்வார்கள்.

இதிலிருந்து இவ்வாறானவர்கள் ஒன்றை மாத்திரம் புரிந்து கொள்ள வேண்டியது கட்டாயமாகும். இந்த அரசாங்கம் என்னதான் அள்ளிக்கொடுத்தாலும் தன்மானத் தமிழர்களாக வடகிழக்கு தமிழ்மக்கள் என்றும் ஒரே குடையின் கீழ், ஒரே தலைமையின் கீழ் இருந்து இயங்கிக்கொண்டு இருக்கின்றார்கள் என்பதனை இந்த (சுப்பர் ஸ்டார்களும்) தமிழர்களும், இந்த நாட்டு அரசாங்கமும் புரிந்து கொள்ளவேண்டும்.

எமது இனத்தின் போராட்டம் முடிந்தாலும், போராடிய சக்திகள் மறைந்தாலும் போருக்கான காரணம் இதுவரைக்கும் தீர்க்கப்டவில்லை. இதனை மக்கள் உணர்ந்தே இந்த அரசாங்கத்தினால் கொண்டுவந்து  திணிக்கப்பட்ட அனைத்து தேர்தல்களிலும் தமிழர்கள் தமது இறுதித் தீர்விற்கான சமிக்ஞைகளை காட்டி வந்திருக்கின்றார்கள். அதில் வெற்றியும் கண்டிருக்கின்றார்கள்.

தற்போது இந்த நாட்டின் ஊடகத்துறை அமச்சர் கெஹலிய ரம்புக்வெல என்ன கூறுகின்றார் என்றால், சர்வதேச நாடுகளின் அரசியலை தீர்மானிக்கும் சத்திகளாக இன்று இலங்கையிலே வாழ்கின்ற தமிழர்கள் மாறியிருக்கின்றார்கள் என்பதனை ஒப்புக்கொண்டு இருக்கின்றார்.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமருன், கனடா நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் ஆகியோர் தமிழ்மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய வரவில்லை. அவர்கள் தங்களது நாடுகளில் நடைபெறவிருக்கும் தேர்தலை மையப்படுத்தி தாங்கள் வெற்றியடைய வேண்டும் என்பதற்காகவே இவர்கள் இங்கு வந்திருக்கின்றார்கள் என கெஹலிய ரம்புக்வெல கூறியிருப்பதன் மூலம் எமது வடகிழக்கு மக்களின் பலம் எவ்வாறு அமைந்திருக்கின்றது என்பதனை ஒவ்வொரு தமிழனும் உணர்ந்து செயற்படவேண்டும்.

விடுதலைப் போராட்டம் என்பது உள்ளுரில்தான் தீர்மானிக்கப்பட்டு நடைபெறும் போராட்டமாகும். ஆனால் எமது விடுதலைப் போராட்டத்தினை தீர்மானிக்கும் சக்தி சர்வதேசமாக மாறியிருப்பது எமக்குக் கிடைத்த மிகப்பெரும் வெற்றி. இத்தோடு இந்த நாட்டிலே இன்னுமொரு இனம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றது என்பதனையும் வெளிப்படுத்தி இருக்கின்றது.

அபிவிருத்தியே எங்கள் இலக்கு என்றால் நாங்கள் தேர்தலில் போட்டியிட வேண்டிய தேவையில்லை. அபிவிருத்தியை யாரும் செய்யலாம். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்ல, வடகிழக்கு மக்களின் அபிலாசைகள் பூர்த்தி செய்யப்பட்டால் மாத்திரமே உண்மையான அபிவிருத்தியை காணமுடியும்.

போராட்டம் நடைபெற்ற காலகட்டத்தில் இருந்த வித்தியாசத்தினையும் இன்று அரசாங்கம் கூறும் சமாதான காலகட்டத்தில் இருக்கின்ற வித்தியாசங்களையும் மக்கள் நன்கு உணர வேண்டிய தேவை இருக்கின்றது. காரணம் அன்று எமது மக்களிடையே ஒழுக்கம், பண்பாடு, கலாசாரம் என்பன மேலோங்கிக் காணப்பட்டது.

ஆனால் இன்று மக்களிடையே ஒழுக்கமின்மை, கலாசார சின்னங்கள் அழிக்கப்பட்டு சிதைக்கப்படுகின்றது, நிலங்கள் அபகரிக்கப்படுகின்றது, பாலியல் வல்லுறவுகள் ஆங்காங்கே நடந்தேறி வருகின்றது இதற்குக் காரணம் யார் என்பதனை மக்கள் உணரவேண்டும் அப்போதுதான் எமது இனத்தினை காப்பாற்ற முடியும்.

இந்தக் காலகட்டம் தமிழர்களைப் பொறுத்த வரையில் மிக முக்கியமான காலகட்டம். இதில் அனைத்து தமிழர்களும் மிகவும் குறியாக இருந்து செயற்பட வேண்டும்.

இன்று அரசாங்கம் கூறும் சமாதானம் ஆலம் வித்தைப் போன்றதொன்று. அதற்குள் ஒன்றுமே இல்லை, பார்ப்பதற்கே அழகாகக் காட்சியளிக்கும்.

அதனைக்கண்டு ஏமாறுபவர்கள் எமது இனம் அல்ல, மாறாக எமது மக்களுக்கான நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பயணம் தொடரும் எனவும் கூறினார்.

TAGS: