மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மாபெரும் மனிதப் புதைகுழியை சர்வதேசப் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்ரீபன் ஜே.ராப்பின் கவனத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று கொண்டு வரவுள்ளது.
மன்னார், திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழியிலிருந்து நேற்று வரை 26 எலும்புக் கூடுகள் முழுமையாகவும், சில எலும்புக்கூடுகள் துண்டு துண்டாகவும் மீட்கப்பட்டுள்ள நிலையில், நேற்று இலங்கை வந்தடைந்த சர்வதேச போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்காவின் விசேட தூதுவரை இன்று கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்துக் கலந்துரையாடவுள்ளது.
இதன்போது மன்னார் புதைகுழி விவகாரத்தை ஸ்ரீபன் ஜே.ராப்பின் கவனத்திற்குத் தாம் கொண்டு வருவோம் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று தெரிவித்தார்.
மன்னார் ஆயர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க குறித்த மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை உடன் தேவை என்று சர்வதேச போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்காவின் விசேட தூதுவரிடம் தாம் இன்று வலியுறுத்தவுள்ளோம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.
மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழியை அமெரிக்காவின் உயர் குழுவினர் நேரில் சென்று பார்வையிடவேண்டும் என்றும் அவரிடம் தாம் வேண்டுகோள் விடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னார் மனிதப் புதைகுழி, மாபெரும் மனிதப் புதைகுழியாக, இனப்படுகொலையின் சான்றாக இருக்கின்றது. எனவே, அதிலிருந்து மீட்கப்படும் எலும்புக்கூடுகளை ஆய்வு செய்வதற்கு சர்வதேச நிபுணர் குழுவை இலங்கை அரசு உடன் அழைக்க வேண்டும்.
அப்போதுதான் உண்மைகள் கண்டறியப்படும். உள்நாட்டு நிபுணர் குழுவில் எமக்கு நம்பிக்கை இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.