என்னை கொலை செய்வார்களோ தெரியவில்லை: அமெரிக்க குழுவினரிடம் மன்னார் ஆயர் தெரிவிப்பு – அமெரிக்க குழு யாழ், வருகை

jaffna_8120142_2இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் அமெரிக்கக் குழுவினரிடம் தெரிவித்தமையினால் என்னைக் கொலை செய்கிறார்களோ தெரியவில்லை என மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை இன்று தெரிவித்தார்.

இலங்கைக்கு வந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ஜே.ராப்புடன் யாழ். ஆயர் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இவற்றை நான் அமெரிக்கக் குழுவிற்குத் தெரிவிப்பது நாட்டின் நன்மைக்கே. இங்குள்ள மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும்.

மாறாக அரசாங்கத்தையோ அல்லது அரசாங்கத்தில் உள்ளவர்களையே பழிவாங்கும் நோக்குடன் நான் இதனைத் தெரிவிக்கவில்லை என்றார்.

இந்த சந்திப்புத் தொடர்பாக யாழ் மறை மாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் கருத்துத் தெரிவிக்கையில்,

ஜெனிவாவில் இவ்வருடம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைப் பேரவையில் 2009ஆம் ஆண்டு வன்னியில் நடைபெற்ற யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்டுள்ள போர்க்குற்றங்கள் தொடர்பில் அமெரிக்காவினால் தீர்மானம் ஒன்று கொண்டு வரப்படவுள்ளது என்றார்.

போர்க்குற்றங்கள் தொடர்பில் உண்மையை அறிய சர்வதேச விசாரணை தேவை- மன்னார் ஆயர்

போர்க்குற்றங்கள் குறித்த உண்மையை அறிய சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் ராயப்பு ஜோசப் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் மத்தியில் உள்நாட்டு செயற்பாட்டில் நம்பிக்கையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சர்வதேச விசாரணையானது நல்லிணக்க செயற்பாடுகளுக்கு பங்களிப்பை வழங்கும்.

போர்க்குற்றங்கள் என்ற பெயரில் ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள், ஒத்துழைக்க மறுக்கும் நிறுவனங்கள் அச்சுறுத்தப்படுகின்றன. பல சந்தர்ப்பங்களில் பொலிஸ் நிலையங்களிலும் மனித உரிமை ஆணைக்குழுவிலும் கூட முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ள மறுக்கப்படுகிறது.

மனித உரிமை மீறல்கள், பாலியல் துஷ்பிரயோகங்கள், சட்டத்திற்கு புறம்பான ஆயிரக்கணக்கான கொலைகளுடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படாமல் உள்ளனர் எனவும் ராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பல சர்ச்சைக்குரிய விடயங்கள் உள்ளன. காணாமல் போனவர்கள், கைது செய்யப்பட்டவர்கள், சட்டவிரோதமாக காவலலில் வைத்து சித்திரவதை செய்யப்படுபவர்கள் குறித்து என் மாவட்டத்தில் வாழும் மக்களின் உண்மையான அபிலாஷைகளை கருத்தில் கொண்டு ஆன்மீக மற்றும் மத நோக்கத்துடன் பேசி வருகிறேன்.

வடக்கு மற்றும் கிழக்கில் மக்கள் இன்னும் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர். பாலியல் பலாத்காரம் தொடர்பில் பெண்கள் மத்தியில் அச்சம் காணப்படுகிறது.

இராணுவத்தினர் நிலங்களை கைப்பற்றி உள்ளனர். சிறையில் பலர் அடைக்கப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். வடக்கு கிழக்கில் இராணுவ பிரசன்னம் அதிகளவில் உள்ளது.

தேவாலயங்களில் உள்ள பிரதிநிதிகள் உட்பட எவரும் அரசாங்கத்தை விமர்சிக்க முடியாத நிலைமையில் அச்சத்துடனும் பாதுகாப்பற்ற நிலையிலும் வாழ்ந்து வருகின்றனர்.

தமிழ் பகுதிகளில் காலனி ஆதிக்கம் காணப்படுகிறது. மொழி, கலாசாரம் மற்றும் பழக்க வழக்கங்கள் இல்லாத தென் பகுதி பெருபான்மையினரின் ஆதிக்கம் தமிழ் பகுதிகளில் உள்ளது.

இலங்கையில் பெருபான்மையினரின் மேலாதிக்கம் சிறுபான்மையினர் மீதுமு செலுத்தப்படுகிறது. போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து உண்மையான விசாரணைகளை செய்ய அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கம் ஏன் தயக்கம் காட்டி வருகிறது எனவும் மன்னார் ஆயர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை அரசாங்கம் போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணையை நிராகரித்து வருகிறது. மன்னார் ஆயர் ஒரு தரப்பு அரசியல் சார்பு கொண்டவர் என குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது. எனினும் அவர் இதனை நிராகரித்துள்ளதுடன் தான் ஒரு அரசியல் ஆர்வலர் என குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க குழு யாழ், வருகை

போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்காவின் விசேட தூதுவர் இன்று புதன்கிழமை யாழ்ப்பாணம் வருகை தந்தார்.இதன்போது உதயன் பத்திரிகை அலுவலகத்துக்கும் அவர் பயணம் மேற்கொண்டார்.

அங்கு உதயன் நிர்வாக இயக்குநரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவன், உதயன் பிரதம ஆசிரியர் ம.வ.கானமயில்நாதன் ஆகியோரை அவர் சந்தித்துப் பேசினார்.

இதன்போது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி இனந்தெரியாத ஆயத தாரிகளால் எரியூட்டப்பட்ட உதயனின் அச்சு இயந்திரத்தையும் அவர் பார்வையிட்டார்.

TAGS: