ஜ.நா மனிதவுரிமைகள் ஆணையகத்தினால் எதிர்வரும் மார்ச் மாதம் சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிரான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்படவுள்ள நிலையில், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் போர்க்குற்றங்களுக்கான சிறப்பு தூதுவர் ஸ்ரீபன் ஜே ராப் நேற்று யாழ்.குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
யாழ்.குடாநாட்டிக்கு இன்று காலை விஜயம் மேற்கொண்டிருந்த தூதுவர் தலைமையிலான குழுவினர் யாழ்.சிவில் சமூகம், வடமாகாணசபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன், வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, வடக்கு முதலமைச்சர் சீவி. விக்னேஷ்வரன் ஆகியோரைச் சந்தித்து உரையாடியுள்ளார்.
இச்சந்திப்புக்களில் சிறப்புச் சந்திப்பாக யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களின் ஆயர்களை யாழ்.ஆயர் இல்லத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளர். இந்தச் சந்திப்பு சுமார் 2மணிநேரம் இடம்பெற்றிருந்தது.
இதன் பின்னர் இறுதியாக வடமாகாண முதலமைச்சரை மாலை 7.45மணியளவில் சந்தித்துப் பேசியுள்ளர். குறித்த சந்திப்பு 1மணிநேரம் இடம்பெற்றுள்ளது.
ஸ்டீபன் ஜே. ராப்பிற்கும் அனந்தி சசிதரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று மணிக்கு யாழ் கிறின்கிறாஸ் விருந்தினர் விடுதியில் நேற்று நடைபெற்றது.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அனந்தி சசிதரன்,
இறுதி யுத்தத்தின் போது, இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட போராளிகள் மற்றும் இளைஞர் யுவதிகள் பற்றி இதுவரையிலும் எதுவித தகவல்களும் இல்லையெனவும். தொடர்ந்தும் காணாமற் போதல், கடத்தல் என்பன இடம்பெற்று வந்தது எனவும் அவரிடம் தெரிவித்தேன்.
காணாமற்போனோர் பற்றிய சரியான தீர்க்கமான நடவடிக்கைகளை அமெரிக்க எடுக்கவேண்டுமென தெரிவித்திருந்தேன்.
அத்துடன், போர்க்குற்ற விசாரணைக்கு அப்பால் இன்றைய நிலையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களிடம் சுட்டிக்காட்டியிருந்தேன்.
மேலும், வலி.வடக்கில் கடந்த 23 வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்த மக்களில் 7500 க்கும் அதிகமான குடும்பங்கள் இதுவரையிலும் மீள்குடியேற்றப்படாமல் அவர்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டிருப்பதினை ராப்பிற்கு எடுத்துக் கூறினேன். என்றார்.