காரகாஸ்: முன்னாள், ‘மிஸ் வெனிசுலா’ அழகியையும், அவரது கணவரையும், கொள்ளையர்கள் சுட்டுக் கொன்றனர்.
இதுகுறித்து, வெனிசுலா நாட்டு போலீஸ் அதிகாரி, ஜோஸ் கிரகெரியோ செரில்டா கூறியதாவது: முன்னாள் வெனிசுலா அழகியான, மோனிகா ஸ்பியர், 29, அவரது, பிரிட்டிஷ் கணவர், தாமஸ் ஹென்றி பேரி, 39, மற்றும் மகள் மாயாவுடன், மெரிடா நகரில் இருந்து, தலைநகர் காரகாசுக்கு காரில் சென்றார்.
அவர்கள் சென்ற கார் ரிப்பேராகி விட்டதால், 45 நிமிடங்கள், சாலையில் காத்திருந்தனர்; அப்போது, அடையாளம் தெரியாத, ஐந்து நபர்கள், அவர்களை நோக்கி வந்ததும், மூவரும், காரின் உள்ளே மறைந்து கொண்டனர்.
ஆனால், காரின் உள்ளே இருந்தவர்களை நோக்கி, மர்ம நபர்கள், துப்பாக்கியால் சுட்டு, தப்பிச் சென்றனர். இதில், மோனிகாவும், அவரது கணவரும் அதே இடத்தில் உயிரிழந்தனர்.
அவர்களது மகள் மாயாவின் காலில், குண்டடிபட்டுள்ளது. கொள்ளையடிக்கும் முயற்சியில், தோல்வி அடைந்ததால், கொள்ளையர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக சந்தேகிக்கின்றோம். இவ்வாறு, ஜோஸ் கிரிகெரியோ கூறியுள்ளார்.