லண்டன் தமிழர்களின் முதலீட்டை எதிர்பார்த்த லியம் பொக்ஸ்

பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சராக இருந்து தற்போது பதவி விலகிய லியம் பொக்ஸ், இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆர்வம் காட்டவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரித்தானியக் கிளையின் முன்னாள் தலைவர் கலாநிதி ரோஜர் சிறிவாசன் குற்றம் சுமத்தியுள்ளார்.

அதேவேளை, பிரித்தானியாவில் வாழ்கின்ற ஈழத் தமிழ் செல்வந்தர்கள் ஊடாக இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முடியுமா என லியம் பொக்ஸ் ஆராய்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

தனது அதிகாரபூர்வமான கடமைகளில் தன்னுடைய நெருங்கிய நண்பரான அடம் வெரிட்டியை தலையிட அனுமதித்தார் என்ற குற்றச்சாட்டுக்களை அடுத்து பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சராக இருந்த லியம் பொக்ஸ் கடந்த வாரம் பதவி விலகியிருந்தார். இந்நிலையிலேயே லியம் பொக்ஸ் மீது கலாநிதி ரோஜர் சிறிவாசன் குற்றம் சுமத்தியுள்ளதாக பி.பி.சி செய்திச் சேவை தெரிவித்துள்ளது. இது குறித்து அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2007-2009 ஆம்ஆண்டு காலப் பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சில தடவைகள் லியம் பொக்ஸை சந்தித்தோம். இச்சந்திப்புகளின் போது இலங்கையில் இடம்பெற்று வருகின்ற மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் நாங்கள் லியம் பொக்ஸுக்கு எடுத்து விளக்க எதிர்பார்த்திருந்தோம். 2009-ம் ஆண்டு இலங்கையில் போர் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த இறுதிக் காலங்களில் இவர்கள் இறுதியாக லியம் பொக்ஸை சந்தித்துள்ளனர். அப்போது அவர் பிரித்தானியாவின் நிழல் பாதுகாப்பு அமைச்சராக இருந்துள்ளார்.

இச் சந்திப்பின் போது லியம் பொக்ஸின் நண்பரான அடம் வெரிட்டியும் இருந்ததாகவும் அவரும் தங்களுடைய கலந்துரையாடல்களில் பங்கெடுத்துக் கொண்டதாகவும் கலாநிதி ரோஜர் சிறிவாசன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இலங்கையில் கடற்கரையை நோக்கியபடி அழகான வீடொன்றை வாங்குவதிலும் லியம் பொக்ஸ் ஈடுபாடு கொண்டிருந்ததாக கலாநிதி ரோஜர் சிறிவாசன் தெரிவித்தார். என பிபிசி செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

லியம் பொக்ஸ் பாதுகாப்பு அமைச்சராக இருந்த போது தனது அதிகாரங்களுக்கான வரையறைகளை மீறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

TAGS: