ஐ.நா மனிதவுரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் 24 நாடுகளின் பிரதிநிதிகளுடன் த.தே.கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தும் என தெரிவித்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணையில் தமிழ் மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதாக கூறினார்.
யாழ். ஊடாக அமையத்தில் இன்று காலை இடம்பெற்ற சமகால அரசியல் நிலைமைகள் குறித்து விளக்கமளிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
2012ம், 2013ம் ஆண்டுகளில் இரு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அந்த இரு தீர்மானங்களிலும் சுட்டிக்காட்டப்பட்டதைப்போன்று மீள்குடியேற்றம், இராணுவ வெளியேற்றம், காணாமல்போனவர்கள், அரசியல் கைதிகளுடைய பிரச்சினைகள், அரசியல் தீர்வு போன்ற பல பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை.
மாறாக அத்தகைய பிரச்சினைகள் மேலும் வலுப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் தமிழ்- சிங்கள இனங்களுக்கிடையில் ஒற்றுமையும், புரிந்துணர்வும் வலுவடைந்து வருவதாக இலங்கை அரசாங்கம் சர்வதேச மட்டத்தில் கடுமையான பிரசாரத்தை முன்னெடுத்திருக்கின்றது.
உண்மையில் அவ்வாறு ஒற்றுமையும், புரிந்துணர்வும் ஏற்படுவதற்கு மாறாக பிரிவினையே வலுத்துக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் தன்னுடைய பிரச்சினையை கையாள தெரியாத தகுதியற்ற அரசாங்கமாக இலங்கை அரசாங்கம் மாறியிருக்கின்றது.
இதற்கிடையில் போர் இழப்பீடுகள் தொடர்பாக அரசாங்கம் மேற்கொண்டுவரும் விபரம் திரட்டும் நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சர்வதேசத்திற்கு தவறான கருத்துக்களை கூறிக்கொண்டிருப்பதாக அண்மையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்திருக்கின்றார். ஆனால் அவருடைய கருத்து சர்வதேசத்தையும், சிங்கள மக்களையும் ஏமாற்றுவதற்கான மற்றொரு நாடகம் என்பதை நாங்கள் புரிந்துகொள்ளாமல் இல்லை.
அரசாங்கம் மேற்படி விபரம் திரட்டும் பணிகளை முன்னெடுக்கும்போதே நாம் அதனை நிராகரித்திருந்ததோடு, சர்வதேசத்திற்கு இதன் உண்மையான நிலையை வெளிப்படுத்துவோம் என கூறியிருந்தோம். அதனை நாங்கள் தொடர்ந்தும் செய்வோம்.
இதேபோன்று வடமாகாணசபை பொறுப்பேற்கப்பட்டு 4 மாதங்கள் கடக்கும் நிலையில் மாகாணசபையின் சுமூகமாக செயற்பாட்டிற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்குவதாக தெரியவில்லை. எனவே இவ்விடயம் குறித்தும் நாம் சர்வதேசத்திற்கு வெளிப்படுத்துவோம்.
மேலும் நேற்றய தினம் யாழ்.குடாநாட்டிற்கு வந்திருந்த பிரதமர் தமிழர்கள் தனிநாடு கேட்பது தவறானது என கூறியிருக்கின்றார். அவர் அவ்வாறு கூறுவதற்கு முன்னர் தமிழர்கள் சுதந்திரமாக பேசுவதற்கு உரிமை வழங்குங்கள். அதன் பின்னர் தமிழர்கள் கூறுவார்கள் தமக்கு என்ன வேண்டும் என்பதை என்றார்.