சிறிலங்கா அரசாங்கத்தால் சிறுபான்மை இனமான தமிழர்களை அழிக்கும் நோக்குடன் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கையின் விளைவாக தமிழ்ப் பெண்கள் தொடர்ந்தும் மரணிக்கின்றனர். மஞ்சுளா சதீஸ்குமார் மற்றும் இவரது தந்தையார் ஆகியோர் சிறிலங்கா அரசாங்கத்தின்.. திட்டமிட்ட நடவடிக்கையால் மரணத்தைத் தழுவிய மிக அண்மைய சாட்சிகளாகும்..
ஆகஸ்ட் 31,2013 அன்று 50 இற்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் அவரது சிறார்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனக் கூறப்பட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டனர். கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில், இந்தப் பெண்கள் கட்டாயக் கருத்தடை மேற்கொள்வதற்கு ஒத்துழைக்காவிட்டால் இவர்கள் இந்த வைத்தியசாலையில் எதிர்காலத்தில் எவ்வித சிகிச்சைகளுக்கும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என சனத்தொகைக் கட்டுப்பாளர்கள் அறிவுறுத்தினர். இக்கருத்தடைச் சிகிச்சைக்கு பெண்கள் ஒத்துழைக்காது விடின், அவர்களின் கணவன்மாருக்கு கருத்தடைச் சிகிச்சை செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டது.
இந்தப் பெண்களில் ஏற்கனவே கருவுற்றிருந்த 26 வயதான மஞ்சுளா சதீஸ்குமாரும் இருந்தார். இவரது கரு அழிக்கப்பட்டு இவருக்கு கட்டாயக் கருத்தடை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இதன்காரணமாக இவர் ஆபத்தான கிருமித் தொற்றுக்கு உள்ளாகி நவம்பர் மாத இறுதியில் மரணமாகினார். இவ்வாறான கட்டாயக் கருத்தடைகள் தற்போது தமிழ்ப் பெண்கள் மத்தியில் அதிகம் மேற்கொள்ளப்படுகிறது. மஞ்சுளாவின் சொந்த இடமான கிளிநொச்சியில் வாழ்கின்ற பெரும்பாலானவர்கள் தமிழர்களாவர்.
“கட்டாயக் கருத்தடைகளை மேற்கொள்வதானது இனப்படுகொலையை நோக்கமாகக் கொண்டதல்ல. ஆனால் கவலைக்கிடமாக, இது சிறிலங்காத் தீவின் அனைத்து இடங்களிலும் இடம்பெறுகின்ற ஒரு வழமையான சம்பவமாகக் காணப்படுகிறது” என சனத்தொகை ஆய்வு நிறுவகத்தின் தலைவர் Steve Mosher தெரிவித்துள்ளார்.
“இவ்வாறான குற்றங்களை உள்ளுர் சுகாதார அதிகாரிகள் தொடர்ந்தும் மறைக்க முயற்சிக்கின்றனர். அண்மைய காலங்களில் இடம்பெறும் இவ்வாறான கட்டாயக் கருத்தடைகளுக்கு உட்படுத்தப்பட்ட தமிழ்ப்பெண்களின் வாக்குமூலங்களை உள்ளுர் அதிகாரிகள் ஏற்கனவே பெற்றுள்ளனர். இந்தப் பெண்கள் மரணமாகும் போது உள்ளுர் அதிகாரிகள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இவ்வாறான பொய்யான வாக்குமூலங்களை வழங்க உதவுகிறது” என சனத்தொகை ஆய்வு நிறுவகத்தின் ஊடக ஒருங்கிணைப்பாளர் ஆன் மோர்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
தனது மகளான மஞ்சுளாவிற்கு என்ன நடந்தது என்பதை உறுதிப்படுத்துகின்ற ஒரு முக்கிய சாட்சியாக மஞ்சுளாவின் தந்தையான சின்னசாமி இராஜரட்ணம் ஆவார். ஆனால் இவரது இறப்பின் முன்னர் சின்னசாமி இராஜரட்ணம் திட்டமிட்ட ரீதியில் சிறிலங்கா இராணுவ அதிகாரிகளால் சித்திரவதைப்படுத்தப்பட்டார். வியாழனன்று இவர் மின்சாரம் பாய்ச்சி இறந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. சின்னசாமி தற்கொலை செய்துள்ளார் என சிலர் கூறுகின்றனர். ஆனால் இவரது மரணம் தன்னிச்சையானது என வேறு சில ஆதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.