இலங்கை நாட்டில் இறுதியான மற்றும் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த நான்கு படிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என சீ.என்.என். உலக சேவை பரிந்துரைக்கின்றது.
நியூயோர்க்கின், அரசியல் திணைக்களத்தின் சிரேஷ்ட ஆய்வாளர், மஹாஹூசேன் ஹசீஸ் என்பவர் இந்த படிமுறைகளை குறிப்பிட்டிருப்பதாக அந்த செய்திச் சேவை கூறுகிறது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அண்மையில் வெளியிட்ட புது வருட செய்தியின் அடிப்படையில், தமது கருத்துக்களை மஹாஹூசேன் ஹசீஸ் வெளியிட்டுள்ளார்.
தேசத்தை கட்டி எழுப்பும் போது, அனைத்து வித்தியாசங்களையும், பிரிவினைகளையும் புறந்தள்ள வேண்டும்.
நாட்டிற்கு தற்போதைய தருணத்தில் புதிய அரசியலையும், அபிவிருத்தி கலாச்சாரத்தையும் கொண்டு வரும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது புது வருட வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், மாற்று கொள்கைகளுக்கான நிறுவனத்தின் பரிந்துரை ஒன்றை ஆய்வாளரான மஹாஹூசேன் ஹசீஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் தமிழ் சிறுபான்மை இனத்தின் கால்வாசிப் பங்கினர், இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான காரணங்களை கண்டறியவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
எனினும், அரைவாசிப் பங்கினர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள போதிலும், அவை போதுமானதாக இல்லை என்ற கருத்தினை மாற்றுக் கொள்கைக்கான நிறுவனத்தின் ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இதனை மையமாக வைத்துக்கொண்டு இலங்கை அரசாங்கம் நான்கு படிமுறைகளை மிக விரைவில் அமுல்படுத்த வேண்டும் என சீ.என்.என். ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த நொவம்பர் 13 ஆம் திகதி சர்வதேச நெருக்கடிக்கான குழுவின் பரிந்துரைக்கு அமைய, அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அதிகாரங்களை பகிர்ந்து அளிக்க வேண்டும்.
கடந்த வடக்கு மாகாண சபை தேர்தலில் 68 சத வீதமான மக்கள் வாக்களித்த நிலையில், 38 ஆசனங்களில் 30 ஆசனங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி கொண்ட நிலையில், இந்த முன்னெடுப்பை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என சீ.என்.என். ஆய்வாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போருக்குப் பின்னர் இலங்கையின் மொத்த உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி வீதம் அதிகரித்துள்ளது.
எனினும், இனத்துவ சமத்துவமின்மை காணப்படுகிறது.
வடக்கைப் பொறுத்த வரையில் கடந்த 2010ஆம் ஆண்டு அங்கு 3 பில்லியன் டொலர் ஒதுக்கீட்டில் உள்ளக கட்டமைப்பு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனினும், அந்த முதலீடுகள் மூலம் தொழில் வாய்ப்புக்களை உரிய வீதத்தில் வழங்க முடியாமல் போய் உள்ளது.
இந்த நிலையில், அந்த பிராந்தியத்தில் தொழிலற்றோர் வீதம் 30 ஆக பதிவாகியுள்ளது.
அத்துடன், 10 குடும்பங்களில் 7 குடும்பங்கள் உணவு பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளன என்பதனை சீ.என்.என். ஆய்வாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் தமிழ் சிறுபான்மையினருக்கும் உரிய பங்கை வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
போரின் போது, தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் போராளிகள் சரணடைந்த பின்னர், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டனர்.
எனினும், வடக்கிலும் ஏனைய பகுதிகளிலும், மதவாத இன வாத சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
இவை நிலையான சமாதானம் ஒன்றை காணும் வகையில் உடனடியாக கட்டுப்படுத்தப்பட வேண்டும் என சீ.என்.என். ஆய்வாளர் மஹாஹூசேன் ஹசீஸ் குறிப்பிடுகிறார்.
இறுதியாக வடக்கில் வரையறுக்கப்பட்ட அரசியல் பொருளாதார அபிவிருத்திகள் முடிவுறுத்தப்பட்டு தமிழ் சிறுபான்மையினர், ஜனநாயக பொருளாதார அபிவிருத்தி மூலம் நன்மை பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
இதன் மூலமே போருக்குப் பின்னரான நல்லிணக்கத்தைக் காண முடியும் என சீ.என்.என். ஆய்வாளர் மஹாஹூசேன் ஹசீஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீ லங்காவின் மேல் ஏற்படவுள்ள சர்வேதேச அழுத்தத்தை மழுங்க செய்ய அந்த இனவாத அரசின் கையூட்டு பெரும் அனேக எழுத்தாளர்கள், கருத்தாளர்களில் ஒருவர் இவர் என சந்தேகிக்கின்றேன். “இலங்கை சிறுபான்மை தமிழ் இனத்தின் கால்வாசிப் பங்கினர்……..” என்ற சொற்றொடர் உண்மைநிலைக்குப் புறம்பானது. இதனை ஏற்றுக்கொண்டால், அங்குள்ள தமிழர்களில் பெருவாரியினர் சிறிலங்க அரசின் “அபிவிருத்தித் திட்டங்களை” வரவேற்று அங்கீகரிக்கின்றனர் என பொருள்படும். இதை உலக நாடுகள், குறிப்பாக மேற்குலக நாடுகள் நம்பினால் எதிர்வரும் மார்ச்சில் அதன் மேல் ஏற்படப்போகும் அழுத்தம் குறையும்.