தமிழர்களுக்கு இலங்கை அரசாங்கத்தின் மீதிருந்த நம்பிக்கை முற்றாக அழிந்து விட்டது. வடக்குத் தமிழர்கள் இன்று சர்வதேச அமைப்புகளை மட்டுமே நம்பி வாழ்கின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னார் புதைகுழி விடயத்தில் எமக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும். சர்வதேசத்தின் மீதான நம்பிக்கை மட்டுமே இப்போது தமிழர்களுக்கு இருக்கின்றது. இவ் விடயம் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை நடத்தி உண்மை கண்டறியப்பட வேண்டும்.
அரசாங்கத்தின் கபடத்தனத்தினை தமிழர்கள் விடயத்தில் தொடர்ந்தும் பயன்படுத்தக்கூடாது. திருக்கேதீஸ்வரம் புதைகுழி சம்பவத்தில் அரசாங்கம் சுயாதீனமான பரிசோதனைகளை நடத்துவதாகத் தெரியவில்லை.
தமிழ் மக்களின் விடயத்தில் அரசாங்கம் ஏன் இவ்வாறாக நடந்து கொள்கின்றது. இன்று தமிழர்களுக்கு அரசாங்கத்தின் மீதிருந்த நம்பிக்கை முற்றாக அழிந்து விட்டது.
அவர்களுக்கான ஒரேயொரு நம்பிக்கையாக இன்று சர்வதேச அமைப்புகள் மட்டுமே உள்ளன. அதனை நம்பியே வடக்குத் தமிழர்கள் வாழ்கின்றனர்.
யுத்த காலக்கட்டத்திலும் இறுதிக்கட்ட யுத்தத்திலும் இராணுவத்தினரால் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கான சிறந்த ஆதாரமாக மன்னார் சம்பவம் உள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமை மீறல்களும் தமிழர் அடக்குமுறையும் இடம்பெற்று வருகின்றன என்பதற்கான சான்றாகவும் அரசாங்கத்தின் அலட்சியமான நடவடிக்கைகள் காணப்படுகின்றன.
சர்வதேசத்தின் முழுப்பார்வையும் இலங்கை மீது திரும்பியிருக்கும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சுயநலமாகவும் சர்வாதிகப் போக்கிலும் நடந்து கொள்வது அரசாங்கத்தின் மீதான சர்வதேச அழுத்தங்களையே அதிகரிக்கும். குறிப்பாக நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையினை அரசாங்கம் இன்றுவரை நடைமுறைப்படுத்தவில்லை என அவர் குறிப்பிடுள்ளார்.
மனித உரிமைகள் தொடர்பிலும் இலங்கையில் நியாயம் கிடைக்கவில்லை. இந்த நிலைமையில் தமிழர்கள் மேலும் அரசாங்கத்தை நம்பி எவ்விதப் பயனும் இல்லை அரசாங்கத்தின் சூழ்ச்சிகளையும் கபடத்தனத்தினையும் தமிழர்களிடத்தில் தொடர்ந்தும் செயற்படுத்தக்கூடாது. இனி மேலாவது வடக்குத் தமிழர்கள் விடயத்தில் முடிவு எடுக்கப்பட வேண்டும்,
யார் எவ்வாறு செயற்பட்டாலும் தமிழர்களின் நியாயம் தான் எமக்கு முக்கியம். அதற்கான செயற்பாடுகளை சர்வதேசம் பெற்றுத்தர வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.