இலங்கை சிறையிலிருக்கும் இந்திய மீனவர்கள் அனைவரும் விடுதலை

fishermen16இலங்கைச் சிறைகளிலுள்ள இந்திய மீனவர்கள் அனைவரும், அவர்களது படகுகளும் வியாழக்கிழமை தொடங்கி உடனடியாக விடுவிக்கப்படும் என்று இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன உறுதிப்படுத்தியுள்ளார்.

இருநாட்டு மீனவர்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக இந்தியா சென்றுள்ள இலங்கை அமைச்சர், இன்று புதன்கிழமை இந்திய வெளியுறவு மற்றும் விவசாய அமைச்சர்களை சந்தித்துப் பேசிய பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இந்த மாதம் 20 ஆம் தேதி இருநாட்டு மீனவர்களிடையே நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் இலங்கை மீனவர்கள் கலந்து கொள்வார்கள் என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

இந்த பயணத்துக்கு வட மாகாண கடற்தொழிலாளர்கள் இணையம் மற்றும் தேசிய மீனவர்கள் ஒத்துழைப்பு இயக்கம் ஆகியவை தெரிவித்துள்ள எதிர்ப்பை அவர் நிராகரித்தார்.

இருநாட்டு மீனவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், இருநாடுகளுக்கும் இடையிலான கடல் வளத்தை மேம்படுவது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை குறித்து விவாதிப்பத்தற்கு ஒரு குழு அமைக்கப்படும் என்றும், இது குறித்து ஆராய ஒரு நிதியத்தை ஏற்படுத்த இந்தியா முழுமையாக பண உதவி செய்ய ஒப்புக் கொண்டுள்ளது என்றும் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இதனிடையே, இலங்கை அமைச்சரை தமிழக மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் சந்திப்பதாக இருந்தது. இந்த சந்திப்பு இன்று நடைபெறவில்லை.

டில்லி பேச்சுவார்த்தைகளுக்கு வடமாகாண மீனவர்கள் எதிர்ப்பு

முன்னதாக, இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக புதனன்று புதுடில்லியில் இரு நாட்டு தூது குழுக்களிடையே பேச்சுவார்த்தைகள் நடைபெறும் அதேநேரம், வட இலங்கை யாழ்ப்பாணத்தில் கூடிய தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும், வடமாகாண கடற்றொழிலாளர் இணையமும் இந்தப் பேச்சுவார்த்தைகளை ஏற்றுக்கொள்வதில்லை என முடிவு செய்திருப்பதாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் வடமாகாண இணைப்பாளரும், சமாதானத்திற்கான இணைப்பாளருமாகிய அன்ரனி ஜேசுதாசன் தெரிவித்தார்.

புதனன்று புதுடில்லியில் நடைபெறுகின்ற பேச்சுவார்த்தைகளும், வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளுக்கும், 2004 ஆம் ஆண்டு பேச்சுவார்த்தைகளிலிருந்து, தொடர்ச்சியாக செயற்பட்டு, தேர்ச்சி அனுபவமும் உள்ளவர்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்படவில்லை என்று இந்தக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

இத்தகைய பிரதிநிதிகள் இந்தப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள வேண்டும் என்ற கருத்தும் வலியுறுத்தப்பட்டிருப்பதாக ஜேசுதாசன் தெரிவித்தார்.

வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டமைப்பாக இது வரையிலும் செயற்பட்டு வந்த அமைப்பு வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதற்கான புதிய தலைவர் செயலாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது. இதற்காக இன்று கூட்டப்பட்ட பொதுச் சபைக் கூட்டத்திலேயே இருநாட்டு மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக இலங்கை இந்திய தரப்புக்களிடையே ஆரம்பிக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தைகளை ஏற்றுக்கொள்வதில்லை என்று தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து கூட்டத்தின் முடிவில் நடத்தப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில் விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தென்னிலங்கை மீனவர்களை விடுதலை செய்வதற்காக இலங்கையின் மீன்பிடித்துறை அமைச்சர், இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினையை முதன்மைப்படுத்தியிருக்கின்றாரோ என்ற சந்தேகமும் மீனவர்கள் மத்தியில் எழுந்திருப்பதும் இந்தப் பேச்சுவார்த்தைகளை நிராகரிப்பதற்கு முக்கிய காரணமாகும் என்றும் ஜேசுதாசன் கூறினார்.

‘இழுவைப் படகுகளில் மடிவலைகளைப் பயன்படுத்தி இலங்கையின் கடல் வளத்தைச் சுரண்டிச் செல்கின்ற இந்திய மீனவர்கள் எல்லைதாண்டி, இலங்கைக் கடற்பரப்பினுள்ளே வரக் கூடாது என்ற தீர்மானம், புதனன்று நடைபெற்ற கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது’ என ஜேசுதாசன் தெரிவித்தார். -BBC

TAGS: