தீவிரவாதம் தொடர்பாக அனைத்துலக காவல்துறையால் (Interpol)தேடப்பட்டு வந்த – விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவர் பிரான்சில் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தினால், பிடியாணை பிறப்பிக்கப்பட்டு,… அனைத்துலக காவல்துறையால் தேடப்பட்டு வந்த கிளிநொச்சியை சேர்ந்த 35 வயதுடைய ஜெயந்தன் தர்மலிங்கம் என்பவரே பாரிசில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் என்று கூறப்படுகிறது.
விபத்து ஒன்றில் பாதிக்கப்பட்ட இவர் கடந்த வியாழக்கிழமை கிழக்கு பாரிசில் உள்ள காவல்நிலையத்துக்கு முறையிடச் சென்ற போதே, இவர் தீவிரவாதம் தொடர்பான அனைத்துலக பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் என்பதை பிரெஞ்சுக் காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
இவருக்கு எதிராக அனைத்துலக பிடியாணை பிறப்பிக்கப்படுவதற்கு முன்னர், பாரிசில் உள்ள நீதிமன்றத்தில் இவர் முன்னிலையாகி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
தீவிரவாதம் தொடர்பாக தேடப்படுவதாக, இவரது பிடியாணை பற்றிய அறிவிப்பு அனைத்துலக காவல்துறையின் இணையத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.