இந்தியா வந்திருக்கும் இலங்கை மீனவர்கள்
இலங்கையில் வாழும் வடகிழக்கு பகுதி தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்வகையிலான தமிழக மீனவர்களின் எந்த ஒரு கோரிக்கையையும் ஏற்க மாட்டோம் என இந்தியா வந்துள்ள இலங்கை மீனவர் பிரதிநிதி குழு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் நிறைவடைந்து உள்ளதால் அகதிகளாக வாழ்ந்து வந்த இப்பகுதி மீனவர்கள் நாடு திரும்பி உள்ளதாகவும், அவர்கள் வாழ்வாதாரம் இந்திய மீனவர்களின் அத்துமீறல் காரணமாக பாதிப்புக்கு உள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இருநாட்டு மீனவர்களுக்கும் இடையே பாரம்பரிய உறவு உள்ளபோதும் தற்போது வாழ்கையை இழந்து வாடும் இலங்கை தமிழ் மீனவர்களின் நலனை காக்க வேண்டிய பொறுப்பு இந்திய தமிழ் மீனவர்களுக்கும் உள்ளதால் அவர்கள் தேவையான ஒத்துழைப்பை கொடுக்கவேண்டும் என்றும் இலங்கை மீனவர்கள் கோரியுள்ளனர். அத்துடன் இந்திய மீனவர்கள் தடை செய்யப்பட்ட மீன்வலைகளை பயன்படுத்தி கேடு விளைவிப்பதாகவும், இயற்கை வளங்களை சூறையாடி நாச செயல்களில் ஈடுபடுவது சகித்துக் கொள்ள முடியாது என்றும் குற்றம் என்றனர்.
இலங்கை மீன் வளத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்னவுடன் இந்தியா வந்துள்ள இவர்கள் புதுதில்லியில் இந்திய தமிழ் மீனவர்களுடன் முன்னோட்ட பேச்சு வார்த்தைக்கு அழைத்து வரப்பட்டதாகவும், ஆனால் காரணம் எதுவும் கூறாமால் இக்கூட்டம் ரத்தாகி விட்டதாகவும் செய்தியாளர்களின் சந்திப்பின் போது தெரிவித்தனர்.
இன்று வியாழக்கிழமை நடைபெற்ற இந்த செய்தியாளர்களின் சந்திப்பின் போது கச்சதீவு பிரச்னை குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் இது இருநாட்டு விவகாரம் என்றும், இந்தியாவுடன் அப்பகுதி மீண்டும் சேர்க்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என்றும் அவர்கள் கூறினர். விரைவில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின் போது நிரந்தர தீர்வு எட்டப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ள இந்த குழு, தமிழக முதல்வர் இந்த பிரச்சனையில் தீவிரம் காட்டவில்லை என்று வருத்தம் தெரிவித்தனர். அத்துடன் தற்போது இலங்கையில் வடமாகணத்தில் பொறுப்பு ஏற்றுள்ள புதிய முதல்வர் விக்னேஸ்வரனும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் இவ்விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தினால் பிரச்சனைக்கு விரைவான தீர்வு கிடைக்கும் என நம்புவதாகவும் கூறினார்கள்.
இந்த செய்தியாளர்களின் சந்திப்புக்கு பிறகு பேசிய மன்னார் பகுதி மீனவர் அமைப்பு குழு தலைவர் ஜஸ்டின் ஆல்பர்ட் சொய்சா, இருநாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் போது எங்களுது கோரிக்கையை இந்திய மீனவர்கள் ஏற்க மறுத்தால் அவர்களில் ஒரு பத்து நபர்களை கொண்ட குழுவை அமைக்க கூறி இலங்கை மீனவர்கள் வாழும் வாழ்கையை காண அழைத்துச் செல்வோம் என்றார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் கழித்து புதிய வாழ்கையை துவக்கும் இலங்கை மீனவர்கள் வாழ வழிவிடும்படி அவர்களிடம் தாங்கள் மன்றாடுவோம் என்றும், அதற்குப் பிறகும் இலங்கை மீனவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்தால், இலங்கை அரசாங்கத்தை இது தொடர்பில் கடுமையான சட்டத்தை இயற்ற வலியுறுத்துவோம் என்றார். -BBC
வாழ்வாதாரத்திற்கு சொந்தக்காரனே, வாழ்வாதாரம் என்ற பெயரில் பகடையாய் போனான் மீனவன், கொன்றழித்தவனும் ,கொன்றழிக்க உதவியவனும் , வாழ்வாதாரம் என்ற பெயரில் பகடையை உருட்டுகிறான் ,தமிழன் விழியிருந்தும் ,மதியிருந்தும் ,விழித்துக்கொள்ளா நிலையில் , தமிழன் நிலைப்பாட்டில் மாற்றம் செய்ய துடிகிறான் , விழித்துக்கொள்வோம் .