அமெரிக்கா- இலங்கைக்கு இடையில் பனிப் போர்: ஜெனீவாவில் யோசனை நிறைவேறுவது நிச்சயம்

obama_mahinda_fight_001ஜெனீவா மனித உரிமை பேரவையில் எதிர்வரும் மார்ச் மாதம் 28ம் திகதி அமெரிக்கா, இலங்கைக்கு எதிராக கொண்டு வரும் யோசனை கட்டாயமாக வெற்றிபெறும் என தெரியவருகிறது.

அமெரிக்காவின் யோசனை தொடர்பான வாக்கெடுப்பு மனித உரிமை பேரவையில் 28ம் திகதி நடைபெறவுள்ள நிலையில், 29ம் திகதி இலங்கையில் மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன.

ஜெனீவாவில் ஏற்பட்ட தோல்வியை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் அரசாங்கம் 29ம் திகதி தேர்தலை நடத்துவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கைக்கு எதிரான யோசனை எதிர்வரும் மார்ச் 28ம் திகதி ஜெனீவா மனித உரிமை பேரவையில் கட்டாயம் தாக்கல் செய்யப்படும் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கொழும்பில் உள்ள தனது தூதரகத்தின் ஊடாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸூக்கு ஏற்கனவே அறிவித்து விட்டது.

எதிர்வரும் மாரச் 8ம் திகதி நடத்தப்படவிருந்த மாகாண சபைத் தேர்தல் 29ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டமையும் அமெரிக்காவின் இந்த அறிப்பே காரணம் என கூறப்படுகிறது.

இதனிடையே அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவிச் செயலாளர் நிஷா தேசாய் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

அமெரிக்கா, இலங்கைக்கு எதிராக யோசனையை கொண்டு வருவதென திட்டவட்டமான முடிவில் இருப்பதால், இலங்கை வரும் நிஷா தேசாய், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்திக்க வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கப் போவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் இவ்வாறு பனிப் போர் ஆரம்பித்துள்ள நிலையில் அதனை எதிர்கொள்ள அரசாங்கம், மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளுடன் இராஜத்திர உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது.

எது எப்படி இருந்த போதிலும் ஜெனீவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் யோசனை நிறைவேற்றப்பட்டால் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்துவது அல்லது பொருளாதார தடைகளை ஏற்படுத்துவது என்ற முயற்சிகளில் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் ஈடுபட்டு வருவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

TAGS: