அனந்தி கைதானாலோ, புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்டாலோ அரசாங்கம் பின்விளைவுகளை சந்திக்கும்!- சுரேஷ் எம்.பி

elilans_wife_ananthiவடமாகாணசபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் கைதுசெய்யப்பட்டாலோ, புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்டாலோ இலங்கை அரசாங்கம் மோசமான பின்விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலை உருவாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்திருக்கின்றார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சந்திப்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,

அனந்தி சசிதரன் தனிநபர் அல்ல, அவர் வடகிழக்கு மாகாணத்தில் மக்கள் பலம் மிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்,

அதற்கு மேல் போரின் இறுதியில் தன்னுடைய கணவரை படையினரிடம் ஒப்படைத்த பின்னர் அவருக்கு என்ன நடந்தது என்பதே தெரியாத நிலையில் தன் 3 பிள்ளைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

எனவே தன்னுடைய பிரச்சினை தொடர்பாகவும், தன்னைப் போன்றே பாதிக்கப்பட்டிருக்கும் அப்பாவி தமிழ் மக்களுடைய பிரச்சினை தொடர்பாகவும் பேசும் உரிமை அவருக்கு இருக்கின்றது.

அதனை அவர் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பேசலாம். அதற்காகவே அவரை 80ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருப்பு வாக்குகளால் தமிழ் மக்கள் தெரிவு செய்திருக்கின்றார்கள்.

எனவே அவருடைய ஜனநாயக உரிமையினை தடுக்கும் உரிமை இலங்கை அரசாங்கத்திற்கு கிடையாது.

அவ்வாறு அவருடைய அடிப்படை உரிமையும், ஜனநாயக உரிமையும் பறிக்கப்படுவதனை சர்வதேச நாடுகள் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் எனவும் இலங்கை அரசாங்கம் நினைத்துவிடக்கூடாது.

எனவே அவர் மீது விசாரணை, கைது, புனர்வாழ்வு என எது நடந்தாலும் அதற்கான மோசமான பின்விளைவினை இலங்கை அரசாங்கம் சர்வதேச மட்டத்தில் எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கும்.

மேலும் இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகள் இனங்களுக்கிடையில் மோசமான பிரிவினைகளை வளர்க்கும் என்பதையும் இலங்கை அரசாங்கம் மற்றும் தென்னிலங்கை இனவாத ஊடகங்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனந்திக்கு புனர்வாழ்வு அளிப்பது வடக்கு கிழக்கு தமிழ் மக்களை அவமதிக்கும் செயல்! பா.அரியநேத்திரன்!

வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி எழிலன் வடமாகாண மக்களினால் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதி என்பதனை அரசாங்கம் மறந்து அவருக்கு புனர்வாழ்வு அளிப்பதென்பது ஒட்டு மொத்த வடகிழக்குத் தமிழ் மக்களையும் அவமதிக்கும் செயலாகும் என மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இவர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது.

வடமாகாண மக்களினால் அதிகூடிய இரண்டாவது இடத்தில் வைத்து பார்க்கப்பட வேண்டிய அனந்தி எழிலனை புணர்வாழ்வு அழிப்பதென்ற போர்வையில் விசாரணைக்கு அழைத்து அவர்மூலம் எதிர்காலத்தில் வெளியிடப்படவிருக்கும் உண்மையான தகவல்களை தடுப்பதற்கும், மறைப்பதற்கும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நன்கு திட்டமிட்ட ஒரு சதி வேலையின் வெளிப்பாடாகவே இதனை பார்க்கவேண்டியுள்ளது.

இந்த நாட்டிலே இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது கண்முன்னே தனது கணவரை பிடித்துக்கொண்டு போனவர்களிடம் அவருடைய மனைவி என்பதன் அடிப்படையில் கணவன்; தொடர்பான தகவல்களைக் கேட்பதற்கு அவருக்கு பூரண சுதந்திரம் இருக்கின்றது மாறாக அதனைப் பறிப்பதற்கு அரசாங்கத்திற்கு என்ன உரிமை இருக்கின்றது.

தன்னுடைய  கணவன் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தார் என்பதற்காக அவருடைய மனைவியை புணர்வாழ்விற்கு உட்படுத்துவதென்பது எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும் அத்தோடு எந்த நாட்டிலும் இல்லாத நடைமுறையுமாகும்.

வடமாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு 3 மாதம் கழிந்த பின்னர் தனது கணவர் தொடர்பாகவும் இலங்கை இராணுவத்தினரால் பிடித்துக் கொண்டு சென்ற ஏனையவர்கள் தொடர்பாகவும் பலகேள்விக் கணைகளை கேட்டுக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் இவருக்கு புணர்வாழ்வு அழிக்க வேண்டும் என அரசாங்கம் கூறுவது சர்வதேசத்தின் கண்ணுக்குள் மண்ணைத் தூவ முற்படுவதனைப் போன்ற ஒரு செயற்பாடாகவே பார்க்கவேண்டி இருக்கின்றது.

இவ்வாறுதான் இந்த நாட்டிலே மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் தமிழ்மக்களுக்காகவும், தமிழ்த் தேசியத்திற்காகவும் குரல் கொடுக்கும் த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடக்கம் கீழ்மட்ட உறுப்பினர்கள் வரைக்கும் உள்ள அனைவரினதும் குரல்வளைகளை நசுக்கும் செயற்பாட்டினையே அன்றிருந்து இன்று வரைக்கும் செய்து கொண்டு வருகின்றது. இதுதான் உண்மையும் கூட.

இவருக்கு அரசாங்கத்தினால் புனர்வாழ்வு அழிப்பதென்ற செய்தி ஒட்டுமொத்த த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களையும், மாகாணசபை உறுப்பினர்களையும், பிரதேச சபைகளின் உறுப்பினர்களையும் எச்சரிக்கும் செயற்பாடாகவே பார்க்கவேண்டி இருக்கின்றது எனவும் இதனை சர்வதேச சமூகம் உன்னிப்பாக உற்று நோக்கி இதற்கான தீர்வினை பெற்றுத்தர வேண்டியது அவர்களினது கடப்பாடாகும் எனவும் தனது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

TAGS: