பிரச்சினைகள் உள்நாட்டிலே தீர்க்கப்பட்டிருந்தால் ஜெனீவாவிற்கு போகவேண்டிய தேவையில்லை!

nallur_meetingஉள்நாட்டின் பிரச்சினைகள் உள்நாட்டிலே தீர்க்கப்பட்டிருந்தால் ஜெனீவாவிற்கு எங்கள் பிரச்சினைகள் போகவேண்டிய கட்டாயம் இருந்திருக்காது. எமது பிரச்சினை 60 வருடங்களைக் கடந்து நகர்ந்திருக்கின்றத என வடமாகாண சபை உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்.முகாமையாளர் சம்மேளனத்தினால் வடமாகாண சபைக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் பரஸ்பர ஒத்துழைப்பை ஏற்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (19) இரவு நல்லூரில் அமைந்துள்ள ஈரோவில் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

வடமாகாண ஆளுநர், வடமாகாணப் பிரதம செயலாளர் உள்ளிட்டோரை மாற்றுதல், மற்றும் வடமாகாண சபையின் அமைச்சுக்களின் அதிகாரங்கள் பிடுங்கப்பட்டமை தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டன.

இவற்றில் ஆளுநர், பிரதம செயலாளர் தொடர்பான விடயங்களில் அக்கறை செலுத்தப்படும் என அமைச்சர்களினால் தெரிவிக்கப்பட்டது.

இருந்தும் சில நன்மைகள் கருதி சிலவற்றை மத்திய அரசின் கைகளில் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் இருக்கின்றன.

உள்நாட்டின் பிரச்சினைகள் உள்நாட்டிலே தீர்க்கப்பட்டிருந்தால் ஜெனீவாவிற்கு எங்கள் பிரச்சினைகள் போகவேண்டிய கட்டாயம் இருந்திருக்காது. தமிழர்களின் பிரச்சினை 60 வருடங்களைக் கடந்து நகர்ந்திருக்கின்றது என்றார்.

இதன்போது, 13வது திருத்தச் சட்டத்தில் பொலிஸ் அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்ட அளவு இருந்தபோதும் அதனை அரசாங்கம் தரமறுப்பது  தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண,

எங்களினால் நடத்தப்பட்ட வட்டமேசை மாநாட்டில் பொலிஸ் அதிகாரத்தினை மத்திய அரசாங்கத்திடம் வைத்திருப்பதாக முடிவெடுக்கப்பட்டது. மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரங்கள் கொடுக்கப்படும் போது சில பிரச்சினைகள் எழக்கூடும் என்றார்.

இந்த கலந்துரையாடலில் பிரதான பேச்சாளராக விஞ்ஞான தொழில்நுட்ப சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண கலந்துகொண்டார். அவருடன் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாடு அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் உடனிருந்தார்.

TAGS: