இலங்கையில் காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்கின்ற ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னால், விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த எழிலனின் மனைவி அனந்தி சசிதரன் சாட்சியமளித்துள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழு கிளிநொச்சி மாவட்டத்திற்கான மூன்றாவது நாள் அமர்வினை இன்று திங்களன்று நடத்தியபோது, வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் சாட்சியமளித்தார்.
‘கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி எனது கணவருடன், நானும் எனது பிள்ளைகளும் இராணுவத்தினரிடம் சரணமடைந்தோம். என்னையும் பிள்ளைகளையும் வவுனியாவுக்கு அழைத்துச் சென்ற இராணுவத்தினர் எனது கணவரை விசாரணை செய்துவிட்டு விடுதலை செய்வதாகக் கூறி, எங்களை மனிக்பாம் முகாமுக்குக் கூட்டிச் சென்று அங்கு தங்க வைத்தார்கள்’ என்று அனந்தி கூறியுள்ளார்.
‘ஆனால் எனது கணவரை அவர்கள் இன்னும் விடுதலை செய்யவில்லை. என் கணவருக்கு இராணுவத்தினரே பொறுப்பு கூற வேண்டும்’ என்றும் அனந்தி தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.
‘இந்த ஆணைக்குழு மீது நம்பிக்கை இல்லை’
தனது கணவரைப் பொறுப்பேற்ற இராணுவ உத்தியோகத்தர்கள் யார் என்பதை நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் தன்னால் இப்போது அடையாளம் காட்டமுடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தம் முடிவடைந்திருந்த நேரத்தில் யுத்தத்தின் அகோரம் காரணமாக தான் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்ததாகவும், அதனால் கணவரை பொறுப்பேற்றவர் யார் என்பதை தன்னால் அடையாளம் காட்ட முடியாது என்றும் அனந்தி தெரிவித்துள்ளார்.
‘காணாமல் போயுள்ளவர்களின் பிரச்சனைக்கு உள்ளூரிலேயே தீர்வு காண வேண்டும். இந்தப் பிரச்சினைக்காக குரல் கொடுப்பதற்காக எனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது. அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதற்காக நான் போராடி வருகின்றேன்’ என்றார் வடக்கு மாகாணசபை உறுப்பினர்.
‘ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரிடம் மனமாற்றம் ஏற்பட்டாலொழிய இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியாது. இந்த ஆணைக்குழுவினால் காணாமல் போயுள்ளவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை’ என்றும் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் கடந்த மூன்று தினங்களாக நடைபெற்ற இந்த விசாரணைகளின்போது, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சாட்சியமளித்திருக்கின்றார்கள்.
நாளை திங்கட்கிழமையும் இந்த விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. -BBC