“மனித உரிமைகள் விஷயத்தில் இலங்கையில் முன்னேற்றம் இல்லை”

இலங்கையில் கடந்த மூன்று மாதங்களில் மனித உரிமை நிலவரங்கள் எந்த வகையிலும் மேம்படவில்லை என்று பிரிட்டனின் வெளியுறவு மற்றும் காமன்வெல்த் நாடுகளுக்கான அமைச்சகம் தனது அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.

 

திருகோணமலையில் மனித உரிமை ஆர்வலர்கள் முன்னெடுத்த ஒரு நிகழ்வில் அவர்கள் மிரப்பட்டனர்.

 

உலகளவில் 27 நாடுகளிலுள்ள மனித உரிமைகள் நிலவரம் குறித்து நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ள அறிக்கை, கடந்த அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் அந்த நாடுகளில் மனித உரிமைகள் நிலவரம் எப்படியிருந்தது என்பதை விபரிக்கிறது.

கடந்த ஆண்டு இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெற்ற போது, மனித உரிமைகள் தொடர்பில் சர்வதேச சமூகத்தின் பார்வை அதன் மீது கூடுதலாக இருந்தபோதிலும், அதில் முன்னேற்றத்தை காண முடியவில்லை என்று பிரிட்டிஷ் அரசின் அறிக்கை தெரிவிக்கிறது.

 

காமன்வெல்த் கூட்டத்தின் போது கொழும்பு செல்வதிலிருந்து தடுக்கப்பட்ட ஒரு பெண்.

 

தமது இந்தக் கருத்துக்கு ஆதாராமாக சில விஷயங்களை அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. கொழும்பில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற மனித உரிமைகள் தொடர்பான ஒரு நிகழ்வில் பங்குபெற வடபகுதியைச் சேர்ந்த, காணாமல் போனோரின் உறவினர்கள் கொழும்பு போக முற்பட்ட வேளையில், இராணுவத்தினரால் அவர்கள் தடுக்கப்பட்டனர் என்று கூறும் அந்த அறிக்கை, நவம்பர் மாதம் 14 ஆம் தேதி அந்த நிகழ்வின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டது எனவும் கூறுகிறது.

அந்த நிகழ்வுக்கு சென்ற ஒரு தமிழ் இளைஞர் காவல்துறையால் தற்காலிகமாக தடுத்து வைக்கப்பட்டார் என்றும், தாக்குதலுக்கு உள்ளானார் எனவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

அதேபோல கொழும்பில் அதேமாதம் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் மனித உரிமை ஆர்வலர்கள் மெழுகுவர்த்திகளை ஏந்தியபடி முன்னெடுத்த விழிப்புணர்வு நடவடிக்கையை தடுக்கும் நோக்கில் நீதிமன்றத்திலிருந்து ஒரு தடையாணையை பெற்றனர் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

 

காணாமல் போனோர்கள் குறித்து தொடரும் கவலைகள்.

 

அதேபோல காமன்வெல்த் மாநாட்டின் போது ஊடகவியலாளர்கள் அச்சுறுத்துப்பட்டு பவேறு பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இலங்கையின் வெளியுறவு அமைச்சர், சாட்சிகளுக்கான பாதுகாப்புச் சட்டம் நாட்டில் முன்னெடுக்கப்படுவதையும் அதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என கடந்த டிசம்பரில் தெரிவித்திருப்பது ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கை என்றும் பிரிட்டிஷ் அரசின் வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அமைச்சம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. -BBC

TAGS: