இலங்கையின் அமெரிக்க எதிர்ப்பு பிரச்சாரம் ஜெனிவாவில் எடுபடுமா என்பதே இப்போதைய கேள்வி. இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல்களை விசாரிக்கும் தீர்மானம் ஒன்றை அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன சேர்ந்து கொண்டுவரும் முனைப்பில் உள்ளன.
ஆனால் இந்த நியாயமான முனைப்பினை சிங்கள அரசாங்கம் அமெரிக்க எதிர்ப்பாளர்களுக்கான எச்சரிக்கையாக வர்ணித்து அது தொடர்பில் பிரச்சாரங்களையும் நாடு நாடாக சென்று எடுத்துவருகின்றது.
ஆசியாவை அமெரிக்கா ஏமாற்ற முடியாது என்றும், அமெரிக்காவின் தன்னாதிக்கத்தை முறியடிக்க வேண்டும் எனவும் அமெரிக்க சார்பில்லா நாடுகளை கூட்டி ஜெனிவா தீர்மானத்தினை முறியடிக்கலாம் என எண்ணுகின்றது.
இந்த விடயத்தில் அமெரிக்காவின் முயற்சியின் பலம், பலவீனம் மனித உரிமை அங்கத்துவத்தில் தற்போது இருக்கும் 43 நாடுகளின் கைகளிலெயே உள்ளது.
இந்த சூழ்நிலையில் அமெரிக்காவுக்கு எதிரான நாடுகளை சுலபமாக இலங்கை மயக்க முடியும். காரணம் அங்கு ஒரே விடயம்தான் உள்ளது அதாவது அமெரிக்க எதிர்ப்பு.
ஆனால் நடுநிலையான மற்றும் அமெரிக்க ஆதரவு நாடுகளை தம் பக்கம் சாய்க்கும் திட்டத்திலேயே சிறிலங்கா பல்வேறு விடயங்களைக் கையாள்கின்றது.
அதாவது கடந்த முறைபோல் அமெரிக்க தீர்மானத்தினை இம்முறையும் பலவீனமாக்குதல், கால அவகாசம் கேட்டல் போன்றவையே அவையாகும்.
இந்த நடவடிக்கைகளை செய்வதற்காகவே இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் உதவியை நாடியுள்ளது இலங்கை.
48 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில், சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, வியட்னாம் போன்ற நாடுகள் ஏற்கனவே இலங்கைக்கு ஆதரவாக செயற்படுவதாக அறிவித்துள்ளன.
அதேபோன்று இலங்கையை அழுத்தங்களுக்கு உட்படுத்தினால், அது சீனாவை ஆதரவை நோக்கி நகரும் என்ற அச்சத்தில், இந்தியாவும், ஜப்பானும் கூட இலங்கையை கைவிடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, ஜப்பானின் இந்த இயலாத்தனம் சீனாவின் ஆதிக்கத்தை கோலோச்சுமே தவிர குறைக்க முடியாது. ஏனென்றால் இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளின் இந்த பய உணர்வே சீனாவுக்கு தேவை. இதனை வைத்துக்கொண்டே சீனா தனது நடவடிக்கைகளில் வெற்றி அடைந்துவிடும்.
இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் தமது சீனா தொடர்பான கொள்கையினை மாற்றுவதன் ஊடாகவே இலங்கைக்கு எதிரான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தீர்மானங்களை வலுப்பெறச் செய்யமுடியும் ஆனால் அது நடக்க வாய்ப்பு இல்லை.
ஆகவே இந்த முறையும் ஒரு சப்பைத் தீர்மானத்திற்கே வழிவகுப்பதாக சூழல்கள் காணப்படுகின்றன.
அதேவேளை, மார்ச் மாத ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணைகள் முன்வைக்கப்பட்டு அவை நிறைவேற்றப்பட்ட பின்னர, இலங்கை அரசு இது தொடர்பில் ஆராய்வதற்காக ஆறு மாத கால அவகாசம் வழங்கப்படவுள்ளதாகவும், அந்த கால அவகாசத்தில் யுத்தக் குற்றம், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைக் குழு ஒன்றின் ஊடாக முழுமையான விசாரணைகளை முன்னெடுக்கப்பதற்கான அழுத்தம் பிரயோகிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
அவ்வாறு தவறும் பட்சத்தில் குறித்த ஆறு மாத காலத்தின் பின்னராக அதாவது, இவ்வருடம் நவம்பர் மாதம் இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவை அறிக்கை ஒன்றினை வெளியிட்டு அதனடிப்படையில் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுமென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.