தமிழ் மக்களின் படுகொலையை சர்வதேச விசாரணை மூலம் உறுதிப்படுத்த வேண்டும்: வடமாகாண சபையில் யோசனை நிறைவேற்றம்

north_pc_001இலங்கை அரசாங்கம் பூண்டோடு தமிழ் மக்களை கொலை செய்தே போரில் வெற்றி பெற்றது என்பதை சர்வதேச விசாரணையின் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற பிரேரணையை முன்வைத்து மாகாண சபையில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் பூண்டோடு அழிப்பு என்ற வார்த்தையை இப்படியான விடயத்திற்கு பயன்படுத்தக் கூடாது என முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இந்த வார்த்தை சட்ட ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடும் எனவும் அதற்கு பதிலாக இணையான வேறு வார்த்தையை பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

என்ன நடந்தது என்பதை சர்வதேச விசாணை ஒன்றின் மூலமாக உறுதிப்படுத்தாத வரை, அப்படியான வார்த்தையை பயன்படுத்துவது பொருத்தமற்றது எனவும் முதலமைச்சர் கூறினார்.

அதேவேளை மன்னார் திருகேதீஸ்வரம் மனித புதைக்குழி தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அணுசரனையோடு விசாரணை நடத்தப்பட வேண்டும் என மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பிரேரணையை முன்வைத்தார்.

சிவாஜிலிங்கம் முன் வைத்த பிரேரணை, அனந்தி சசிதரன் முன் வைத்த பிரேரணை மற்றும் முள்ளிவாய்க்காலில் பொதுமக்கள் இறந்த இடத்தில் நினைவு தூபி அமைக்கப்பட வேண்டும் என்ற யோசனை உள்ளிட்ட யோசனைகள் இன்று சபையில் நிறைவேற்றப்பட்டன.

அத்துடன் மாகாண சபையில் முன்வைக்கப்பட்ட 14 சட்டமூலங்களும் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுத்தூபி அமைப்பது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனினால் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

அப்பிரேரணையின் முழு வடிவம் வருமாறு,

இலங்கைத்தீவில் காலம் காலமாக தொடர் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வரும் தமிழர்கள் 2009 இல் நடந்த இறுதிப்போரில் உச்சக்கட்ட இன அழிப்பை முகம் கொடுத்தோம்.

இறுதிப்போரின் வலிகள் இன்னும் ஆறாத நிலையில், அப்போரில் தம் உறவுகளை இழந்த ஏராளமான மக்கள் இன்னும் தம் உணர்வுகளுடன் நடைப் பிணங்களாக வாழ்ந்து வருகின்றனர். தம்மை யாராவது காப்பாற்ற வருவார்களா, மாட்டார்களா என்ற ஏக்கத்தில் சின்னஞ்சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏங்கித் தவித்த நிலை, பசி என்று குழந்தைகள் அழுத போது செய்வதறியாத நிலையில் பெற்றோர் கலங்கிய அவல நிலை,

பதுங்கு குழிகளை விட்டு வெளியே வந்தால் தப்ப முடியாது என்று எண்ணி பதுங்கு குழிகளுக்குள்ளேயே தங்கியிருந்த நேரம் அதற்குள்ளும் குண்டுகள் விழுந்து உறவுகள் மடிந்த நேரம், உயிரிழந்த தம் உறவுகளை புதைப்பதற்கு இயலாமல், உடலங்களை விட்டு விட்டு ஓடிய நிலை ஆகியவற்றை எண்ணிப் பாருங்கள்.

லட்சக்கணக்கில் தமிழ் உறவுகளை பலி கொண்ட அந்த பேரவலம், தமிழ்த் தேசிய இனத்தின் கூட்டு மன உளவியலில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இந்நிலையில் அங்கு உறவுகளை இழந்து தற்போது வாழ்ந்து வருகின்ற மக்கள் தம் உறவுகளை நினைவு கூர்வதற்கு ஒரு பொது நினைவிடம் இல்லாத நிலையை ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தோரை நினைவு கொள்ளும் விதத்தில் உலகின் மூத்த குடித்தமிழினம் மிக உயர் நாகரீகப் பண்பாடுகளை கொண்டுள்ளது. எம்மின வரலாற்றில் மிக அதிகமான மக்கள் ஒருமிக்க உயிரிழந்த வரலாறாக மாறிவிட்ட முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த எம் உறவுகளை நினைவு கூர ஒரு பொது நினைவுச் சின்னம் அமைக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது.

ஆழிப்பேரலையால் உயிரிழந்த மக்களுக்கென முல்லைத்தீவில் ஒரு நினைவு மண்டபம் 2005 இல் கட்டப்பட்டு அதில் உயிரிழந்த ஒவ்வொருவருடைய பெயரும் குறிக்கப்பட்டுள்ளது. இது காலாகாலத்திற்கு உயிரிழந்தோரின் உறவுகளையும் சந்ததியினரையும் அவர்களை நினைவு கூர வழி சமைக்கின்றது.

அதே போன்று முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவு ஆலயத்திலும் உயிரிழந்தோரின் பெயர்கள் பொறிக்கப்படுவது மிக அவசியமாகும். அப்படி பெயர்கள் பொறிக்கப்படுவது, உயிரிழந்த தத்தம் உறவுகளை, காலாகாலத்திற்கு அவர்களின் சந்ததிகள் நினைவு கூர உதவியாக இருக்கும் என்பதோடு, எம்மினத்தின் பண்பாட்டையும் பிரதிபலிப்பதாக அமையும்.

தமிழ்த்தேசிய இனத்தின் பேரவலத்தின் நினைவு ஆலயம் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட வேண்டும்.

என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

TAGS: