இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 2013-ம் ஆண்டில் தான் அதிகளவு தேயிலை ஏற்றுமதி நடந்துள்ளதாக பெருந்தோட்ட தொழில்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தேயிலைச் சபையின் புள்ளிவிபரங்களின்படி, கடந்த ஆண்டில் 1.54 பில்லியன் டாலர்கள் அளவுக்கு தேயிலை ஏற்றுமதி அதிகரித்துள்ளது. 2012-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது கிட்டத்தட்ட 22 சதவீத அதிகரிப்பு.
தேயிலை உற்பத்தியும் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ச்சியாக முன்னேறிவருவதாகவும்அமைச்சர் சமரசிங்க கூறியுள்ளார்.
இதேவேளை, தோட்டங்களில் தேயிலைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்துவருவதால் உரிய நேரத்தில் தேயிலை கொழுந்து பறிக்கும் வேலையை பூர்த்தி செய்துகொள்ள முடியாமல் இருப்பதாகவும் பெருந்தோட்ட நிறுவனங்களின் சங்கம் கூறுகிறது.
சர்வதேச சந்தையில் இலங்கைத் தேயிலைக்கு நல்ல விலை கிடைத்துவருகின்ற சந்தர்ப்பத்தில், போதிய தொழிலாளர் பலம் இல்லாத நிலையிலும் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காட்டிவருவதாகவும் பெருந்தோட்ட நிறுவனங்கள் சங்கத்தின் தலைவர் ரொஷான் ராஜதுரை பிபிசியிடம் தெரிவித்தார்.
பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழுள்ள தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கூடுதல் சம்பளத்துக்காக சிறு முதலாளிமாரின் தோட்டங்களுக்கு வேலைக்குச் செல்கின்றனர்
எனினும் பெருந்தோட்டக் கம்பனிகளின் நிர்வாகத்தின் கீழ் மிகக் குறைவான சம்பளமே கிடைப்பதால், தொழிலாளர்கள் சிறு தோட்ட முதலாளிகளின் தோட்டங்களில் வேலைபார்க்க செல்கின்ற காரணத்தினாலேயே கம்பனி நிர்வாகத் தோட்டங்களில் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்துவருவதாக தொழிற்சங்கத் தலைவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தேயிலைத் தொழிற்துறையின் எதிர்காலம்
நாட்டின் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பை ஈடுகொடுக்க முடியாமலும், தோட்டங்களில் சுகாதாரம், குடிநீர், வீதிகள் உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாமலும் தொழிலாளர்கள் சிரமப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன் தெரிவித்தார்.
1992-ம் ஆண்டில் பெருந்தோட்டங்களைப் பொறுப்பேற்றதிலிருந்து, தனியார் கம்பனிகள் தொழிலாளர்களுக்கு ஒரு வீட்டைக்கூட கட்டிக் கொடுத்ததில்லை என்றும் மக்கள் தங்களின் அடிப்படை வசதிகளுக்காக இன்னும் அரசியல்வாதிகளையே நம்பியிருக்க வேண்டியிருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.
இன்னும் 25 ஆண்டுகளில் தேயிலைத் தோட்டங்களில் 40 வீதமான தேயிலைச் செடிகள் அழிந்துவிடும் என்றும் அவற்றின் மீள்நடுகைக்காக கம்பனிகள் போதியளவு முதலீடு செய்வதில்லை என்றும் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குற்றஞ்சாட்டுகிறார்.
தொழிலாளர்களுக்கு காணிகளை பகிர்ந்தளித்து தேயிலை மீள்நடுகையை உறுதிசெய்யுங்கள்
எனவே, தொழிலாளர்களையும் பங்குதாரர்களாக மாற்றிக்கொண்டு, தொழிலாளர்களுக்கு தேயிலைக் காணிகளை பகிர்ந்தளித்து மீள்நடுகை நடவடிக்கையை தொடங்கினால் மட்டுமே இலங்கையின் தேயிலைத் தொழிற்துறை பாதுகாக்கப்படும் என்றும் யோகராஜன் பிபிசியிடம் கூறினார்.
இதேவேளை, எதிர்காலத்தில் குறைந்தளவு தேயிலைக் காணிகளில் குறைந்தளவு தொழிலாளர் பலத்துடன் தரமான தேயிலையை தயாரிப்பதே தங்களின் எதிர்பார்ப்பு என்று பெருந்தோட்ட நிறுவனங்கள் சங்கத்தின் தலைவர் ரொஷான் ராஜதுரை தெரிவித்தார்.
போட்டி நாடுகள் தேயிலை உற்பத்தியின் அளவை பெருக்குவதற்கு நடவடிக்கைகளை எடுத்துவரும் சூழ்நிலையில், தேயிலையின் தரத்தை அதிகரிக்கவே இலங்கை நடவடிக்கை எடுக்கும் என்றும் ரொஷான் ராஜதுரை கூறினார். -BBC