வடக்கு மாகாணசபையின் உறுப்பினரான அனந்தி எழிலன் தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்வந்த நாளிலிருந்து ஊடகக் கவனத்தை அதிகமாக ஈர்க்கும் ஒருவராக விளங்கி வருகின்றார். தமிழ் ஊடகங்களை மாத்திரமன்றி சிங்கள ஊடகங்களையும் இவர் தொடர்பான செய்திகள் ஆக்கிரமித்து வருகின்றன.
இவர் கூறிய விடயங்கள் செய்திகளாக வெளிவருகின்ற அதேவேளை இவர் கூறாத விடயங்களும் செய்திகள் ஆக்கப்படுகின்றன. மறுபுறம், சிங்களப் பேரினவாதத்தைக் கக்கும் ஊடகங்களோ ‘அனந்தி சிரித்தால் குற்றம், கதைத்தால் குற்றம், நடந்தாலும் குற்றம்” என்ற பாணியில் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
இந்த வரிசையில் அனந்தி அவர்களின் அண்மைக்காலச் செயற்பாடுகளைக் கருத்தில் எடுத்து, விடுதலைப் புலிகளின் முன்னைநாள் போராளிகளைப் போன்று, அவர் தடுத்து வைக்கப்பட்டுப் புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும் என பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக செய்திகள் அண்மையில் வெளியாகி இருந்தன.
அரச சேவையில் 30 வருடங்களாகப் பணியாற்றி தேர்தலில் போட்டியிடுவதற்காக சேவையில் இருந்து கடந்த வருடம் விடுப்புப் பெற்ற அனந்தி ஒருபோதும் விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினராகவோ அல்லது தொண்டராகவோ இருந்ததாக எந்தவொரு பதிவும் இல்லாத நிலையில் அரச படையினரிடம் கையளிக்கப்பட்டு காணமாற் போன தனது கணவர் எழிலனையும் அவரைப் போன்ற வேறு ஆயிரக்கணக்கான தமிழர்களையும் கண்டறிவதில் மேற்கொள்ளும் முயற்சிகளே பேரினவாதிகள் இத்துணை தூரம் அவர் மீது எரிச்சல் கொள்ளக் காரணமாக அமைந்துள்ளது என்பது ஊகிக்கக் கூடியதே.
தோற்றுப்போன தமிழன் வாய்மூடி மௌனியாக, தருவதைப் பெற்றுக் கொண்டு இருக்க வேண்டும் என நினைக்கும் சிங்களப் பேரினவாதத்தின் செருக்கிற்கு அனந்தி அவர்களின் செயற்பாடுகள் சவால் விடுவதாக அமைந்து வருகின்றன. கணவனைத் தொலைத்து விட்டுத் தேடிக் கொண்டிருக்கும் மூன்று பிள்ளைகளின் தாயான அவர் ‘அனைத்தையும் மறந்துவிட்டு அடுப்படியில் முடங்கிக் கிடக்க வேண்டும்” என்றே சிங்களம் விரும்புகின்றது.
கடந்த ஆண்டு நவம்பர் மாத நடுப்பகுதியில் கொழும்பில் பொதுநலவாய நாடுகளின் உச்சிமாநாடு நடைபெற்ற வேளையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பிரித்தானிய தலைமை அமைச்சர் டேவிட் கமரூன் அவர்களைச் சந்தித்து அறிக்கை தருவதற்கு, பல்வேறு தடைகளையும் மீறி, அனந்தி சென்ற விதம் காணொளிகளில் பதிவாகி வெளிவந்த போது சிங்களம் அவமானத்தில் நெளிந்தது.
தொடர்ந்து வந்த ஒருசில நாட்களில் யேர்மனிக்குச் சென்ற அவர் சிறிலங்காவில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் முன்னர் தோன்றி சாட்சியமளித்தார். போரின் இறுதிக் கட்டத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள், சர்வதேச போர்விதிகளுக்கு மாறாக பொதுமக்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்கள், இன அழிப்பு நடவடிக்கைகள் என்பவற்றில் அரச படைகளுக்கு உள்ள தொடர்பை அம்பலப்படுத்தும் வகையிலான இந்த பன்னாட்டு மன்றத்தில் அனந்தி நேரில் தோன்றி சாட்சியம் அளித்தமை சிங்களப் பேரினவாதிகளை மேலும் சீற்றத்துக்கு ஆளாக்கியுள்ளது.
மாகாணசபை உறுப்பினராகப் பதவியேற்றதும் முதன்முதலாக அனந்தி மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணத்தில், சிறிலங்காவிற்கு எதிராக பன்னாட்டு விசாரணைகளைக் கோரி ஐ.நா. மனித உரிமைச்சபையில் தீர்மானம் நிறைவேற்றும் முனைப்பில் உள்ள, அமெரிக்காவிற்குச் சென்றதும், வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளைச் சந்தித்ததும் கூட சிங்களப் பேரினவாதிகளுக்கு உவப்பானதாக இருக்கவில்லை.
அனந்தியை அச்சுறுத்திப் பணிய வைப்பதற்கு தேர்தல்கள் நடைபெற்ற காலப்பகுதியிலேயே பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், தனது ஆதரவாளர்களின் உதவியோடும், பன்னாட்டு நிறுவனங்கள், அரசுகளின் உதவியோடும் அவர் அவற்றிலிருந்து தப்பித்துக் கொண்டார்.
தமிழ் மக்கள் மத்தியில் இருந்து ஜனநாயக அரசியலில் ஈடுபடுவதற்குப் பெண்கள் அதிகமாக முன்வராத ஒரு சூழ்நிலையில் அதற்கு முன்வந்த அனந்தியின் துணிவு பாராட்டத்தக்கது. ஓர்மத்துடன் கூடிய அவருடைய அரசியல் பணி தொடர வேண்டும். ஈழத்திலே பாதிக்கப்பட்ட பெண்களின் குரலாக அவர் விளங்க வேண்டும் என்பது எம் போன்றோரின் விருப்பம்.
ஆனால், அவரின் ஒருசில நடவடிக்கைகள் அவரை வேறு யாராவது பின்னணியில் இருந்து தவறாக வழிநடத்துகின்றார்களோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கமாக உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பிலேயே அவர் தேர்தலில் நிறுத்தப்பட்டிருந்தார். அந்நிலையில், அந்தக் கட்சிகளின் கொள்கைகளுக்கு அமைவாகவே அவர் நடந்து கொள்வதுடன், அந்தக் கட்சிகளின் கொள்கைகளுக்கு முரணாகவோ, கட்சிக்குச் சங்கடத்தை ஏற்படுத்தும் முகமாகவோ நடந்து கொள்வதை அவர் தவிர்த்துக் கொள்ளவும் வேண்டும்.
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் இரண்டாவது அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவர் அவர். அனந்தி ஒர் பெண் என்பதற்காகவோ, விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட முன்னைநாள் அரசியல்துறைப் பொறுப்பளரின் மனைவி என்பதற்காகவோ மாத்திரமன்றி, அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் என்பதற்காகவுமே அளிக்கப்பட்ட வாக்குகள் அவை. இதனை வேறு விதத்தில் சொல்வதானால், அனந்தி சுயேட்சையாகவோ அன்றி வேறு கட்சி சார்பிலோ போட்டியிட்டிருந்தால் இவ்வளவு வாக்குகளைப் பெற்றிருக்க முடியாது என்பதே யதார்த்தம்.
எனவே, அவ்வாறு வெற்றி பெற்ற அவர் தனது மக்கள் பணிக்குச் சமாந்தரமாக கட்சியில் ஒரு இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். யாழ்ப்பாண மாவட்டத்தில் அவர் பெற்ற 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் என்பது ஒரு பொதுத்தேர்தலைப் பொறுத்தவரை நாடாளுமன்றத்துக்குத் தெரிவாவதற்குத் தேவைக்கும் அதிகமானது ஆகும்.
ஒரு மாகாணசபை உறுப்பினர் என்பதைத் தவிரவும், அவர் விடுதலைப் புலிகளின் உயர்மட்டத் தலைவர்களுள் ஒருவரின் மனைவி, யுத்தத்தை பிறர் வாயிலாக அறிந்து கொள்ளாமல் நேரடியாகத் தரிசித்தவர்களுள் ஒருவர், யுத்தத்தின் முடிவில் தனது கணவரைப் படையினரின் கைகளில் ஒப்படைத்து விட்டு நான்கு வருடங்களாக அவர் எங்காவது ஒரு இடத்தில் உயிரோடு இருக்க மாட்டாரா எனத் தினமும் தேடிக் கொண்டிருக்கும் ஒருவர், இதற்கெல்லாம் அப்பால் ஈழத் தமிழ்ப் பெண்களின் ஒற்றைக் குரலாகவும் அவரே விளங்கி வருகின்றார்.
எனவே, அவர் மிகுந்த பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். அவரது சேவை தமிழ் மக்களுக்கு நீண்டகாலத்திற்குத் தேவை என்ற உணர்வுடன் அவரின் செயற்பாடுகள் அனைத்தும் இருக்க வேண்டும். பொம்மலாட்டத்தில் மறைவில் இருந்து இயக்கப்படுவதைப் போன்று அவரின் செயற்பாடுகள் தென்படுவதைத் தவிர்க்க வேண்டும்.
வரலாறு அவருக்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. அந்த வாய்ப்பை அவர் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தேவையற்ற சர்ச்சைகளில் சிக்கி அவற்றுக்குப் பதிலிறுப்பதில் தனது பொன்னான நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிராமல், தேர்தல் காலத்தில் தான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற அதிக நேரத்தைச் செலவிட வேண்டும். அதேவேளை, வெளியில் இருந்து தனது சென்னெறியைத் தீர்மானிக்க நினைப்பவர்களை விலத்தி வைக்க வேண்டியதும் அவர் பொறுப்பே.
– சண் தவராஜா