வட மாகாண சபையின் பிரேரணை தொட ர்பில் அரசாங்கம் கவனத்திற் கொள்ளாவிட்டாலும் சர்வதேசம் கவனத்தில் கொள்ளும். சர்வதேச விசாரணைகளே தமிழ் மக்களின் இறுதி நம்பிக்கையாகும் இதனைத் தொடர்ந்தும் சர்வதேசத்திடம் வலியுறுத்துவோம் என்று வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
அரசாங்கம் அன்று செய்ததன் விளைவுகளையே இன்று சர்வதேச அழுத்தங்களின் மூலம் அனுபவிக்கின்றது. இறுதி யுத்தத்தில் நடந்த உண்மைகளை அரசாங்கத்தின் செயற்பாடுகளே வெளிப்படுத்துகின்றது எனவும் அவர் கூறினார்.
வட மாகாண சபையின் பிரேரணை தொடர்பில் அரசாங்கத்தின் அலட்சியப்போக்கு தொடர்பில் வினா எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த திங்கட்கிழமை வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை தொடர்பில் அரசாங்கம் அலட்டிக்கொள்ளவில்லை என்று குறிப்பிடுவதானது இறுதிக்கட்ட யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் அரசாங்கம் அக்கறை கொள்ளவில்லை என்றே அர்த்தமாகும். அரசாங்கம் தமது நிலைப்பாட்டில் இருந்து செயற்படுகின்றனரே தவிர வடக்கின் மக்கள் தொடர்பில் அக்கறை கொள்ளவில்லை.
அரசாங்கம் இந்த நான்கு ஆண்டுகளில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தியிருக்குமாயின் இன்று நாம் சர்வதேச விசாரணைகளை கேட்கவேண்டிய அவசியமில்லை. நாம் ஆரம்பத்தில் இருந்தே அரசாங்கத்திடமே நியாயம் கோரினோம். எனினும், அரசாங்கம் இன்றுவரையில் எமக்கான நியாயத்தினை பெற்றுத்தராமல் இராணுவ கட்டுப்பாட்டின் கீழேயே வட மாகாணத்தை வைத்துள்ளது.
தமிழ் மக்களின் இறுதி நம்பிக்கையாக இருப்பதே சர்வதேச விசாரணைகள் மட்டுமேயாகும். அரசாங்கத்தினால் பெற முடியாத நியாயத்தினை சர்வதேசத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என்றே தமிழ் மக்கள் நம்புகின்றனர்.
எனவே வடமாகாண சபை என்ற வகையில் நாமும் சர்வதேச அணுகுமுறையினை எதிர்பார்க்கின்றோம். தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் நியாயம் தொடர்பில் நாம் தொடர்ந்தும் சர்வதேச விசாரணைகளுக்கு வலியுறுத்துவோம். எமது கோரிக்கைகள் ஜனாதிபதிக்கு விளங்காவிடினும் நாம் கேட்கும் நியாயங்கள் சர்வதேசத்திற்கு விளங்கும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.
மேலும், சர்வதேச தலையீட்டினால் இலங்கையில் பிரச்சினைகள் வரும் என்பதை நான் ஏற்றுக் கொள்கின்றேன். எனினும், இவை அனைத்தையும் நாமாக விரும்பிச் செய்யவில்லை. அன்று அரசாங்கம் நடந்து கொண்டதன் விளைவுகளை இன்று அதே அரசாங்கம் அனுபவிக்கின்றது.
இறுதி யுத்தத்தில் சுயாதீனமாகவும் நேர்மையாகவும் இராணுவத்தினர் நடந்திருப்பார்களாயின் அரசாங்கம் இன்று சர்வதேசத்திடம் அஞ்சத் தேவையில்லை. பொது மக்கள் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் தொடர்பிலான ஆதாரங்கள் அனைத்தும் சர்வதேசத்திடம் உள்ளன. அவர்களாகவே இலங்கை தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்தனர். இதில் எமது தூண்டுதல்கள் ஆரம்ப கட்டத்தில் காணப்படவில்லை.
எமக்குத் தேவைப்படுவதெல்லாம் எமது தமிழ் மக்கள் தொடர்பில் நியாயமும் நிவாரணங்களுமே. இறுதிக் கட்ட யுத்தத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்த பொது மக்கள் கொல்லப்பட்ட பொது மக்கள் மற்றும் வடக்கின் கட்டுப்பாடுகளில் இருந்து விடுதலை. இவை எமது நியாயமான கோரிக்கைகளே இதில் தேசத்துரோக செயற்பாடுகள் எவையும் இல்லை.
அதே போல் மன்னார் திருக்கேதீஸ்வரம் பிரதேச புதைகுழி விடயத்தில் நியாயமான முடிவு கிடைக்கப்பட வேண்டும். இவ் புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக் கூடுகள் யாருடையது. காணாமல் போனோர் இதில் தொடர்புபட்டிருக்க முடியுமா என்ற எமது கேள்விகளுக்கு உண்மையான முடிவை எதிர்பார்க்கின்றோம்.
இன்று அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பிரேரணையினை செயற்படுத்துவதாகக் குறிப்பிட்டாலும் அதில் உண்மைத் தன்மை இல்லை. ஆகவே சர்வதேச விசாரணைகள் மட்டுமே இன்று எமது ஒரே நம்பிக்கை எனவும் அவர் தெரிவித்தார்.