இறுதிப்போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் யுத்த குற்றச்சாட்டுக்கள் குறித்தும் சுயாதீனம் மிக்கதும் பாரபட்சமற்றதுமான விசாரணையொன்றை அரசாங்கம் நடத்தப் போவதில்லை. எனவே சர்வதேச விசாரணையே இன்றியமையாததாகும் என்று இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா தேசாய் பிஷ்வாலிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இலங்கைக்கு 3 நாள் விஜயமொன்றை மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஷ்வாலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனும் சந்தித்து பேசினர். இந்தச் சந்திப்பின் போதே இவ்வாறு வலியுறுத்தப்பட்டது.
கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவரின் இல்லத்தில் 7 மணி முதல் 8 மணிவரையில் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
இச்சந்திப்பில் அமெரிக்க தூதுவர் மிச்சல் சிசனும் கலந்து கொண்டார். வடக்கு, கிழக்கின் இன்றைய நிலை குறித்தும் தமிழ் மக்களின் தற்போதைய நிலைமை தொடர்பாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளருக்கு விளக்கிக் கூறியுள்ளனர்.
அரசாங்கமானது இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பிலோ அல்லது குற்றச்சாட்டுக்கள் குறித்தோ உரிய வகையில் விசாரணை நடத்தவில்லை. சுயாதீனம் மிக்கதும் பாரபட்சமற்றதுமான விசாரணையை நடத்தும் விடயத்தில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது.
இதனால் எதிர்காலத்தில் அரசாங்கம் சுயாதீனமான விசாரணைகளை மேற்கொள்ளும் என்பதில் நம்பிக்கை கொள்ள முடியாது. எனவே சர்வதேச விசாரணையே இன்றியமையாததாகும். இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.