வடமாகாணத் தமிழ்ப் பேசும் மக்கள் இன வேறுபாடின்றி மனிதாபிமான அடிப்படையில் வாழ்ந்து வருபவர்கள் என்று உலகம் எம்மைப் போற்றும் அளவிற்கு எமது நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வன் தெரிவித்துள்ளார்.
வவுனியா நகர சபை அட்டவணைப்படுத்தப்படாத பதவி அணியினருக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு, வவுனியா நகரசபைக் கலாசார மண்டபத்தில் இன்று மாலை 5 மணிக்கு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே வடமாகாண முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முதலமைச்சர் விக்னேஸ்வரனின் முழு உரையும் பின்வருமாறு,
நிரந்தர நியமனம் கோரி நீங்கள் இதுவரைகாலமும் நடாத்திய போராட்டங்களுக்கு ஒரு சுமூகமான முடிவைப் பெற்றுக் கொண்டதையிட்டு நாங்களும் மனத்திருப்தி அடைகின்றோம்.
நீங்கள் சேவையில் சேரும் போது உங்களுக்கான தகைமைகள் ஒருவாறாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அண்மையில் வவுனியா நகரசபையின் செயலாளரினால் வெளியிடப்பட்ட ஆட்சேர்ப்புத் தொடர்பான பத்திரிகை விளம்பரம் பலகாலம் ஒப்பந்த அடிப்படையில் வேலைசெய்து வந்த உங்களுக்குப் பேரதிர்ச்சியைக் கொடுத்ததை நானறிவேன். திடீரென்று தகைமைகள் மாற்றப்பட்டிருந்தன.
உண்மையில் ஜனவரி மாதம் 2ந் திகதி ஜனாதிபதியைச் சந்தித்தபோது பொதுவாக இது பற்றி ஆராய்ந்தேன். அதற்கு அவர் தகைமைகள் குறைந்தவர்கள் முன்னர் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தாலும் உரிய தகைமைகளை இப்பொழுது பெறவேண்டும் என்று கூறினார்.
தகைமைகள் குறைந்தவர்களையும், தகைமைகள் கூடியவர்களையும் ஒரே சேவையில் வைத்திருக்க முடியாது என்றார். அதற்குநான் மேற்படி குறைந்த தகைமைகள் என்று கூறப்படுபவர்கள் பலவருடகால அனுபவத்தின் நிமித்தம் தமது தகைமைகளை அனுபவ ரீதியாகக் கூட்டிக் கொண்டிருக்கின்றனர் என்று எடுத்துக்காட்டி ஒரு குறிப்பிட்ட காலத்தினுள் ஒப்பந்த அடிப்படையில் அமையத் தொழிலாளர்களாகக் கடமையாற்றியவர்களை நிரந்தர சேவைக்குள் உள்வாங்க நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று கூறினேன்.
இது சம்பந்தமாக நாடுபூராகவும் ஒரே கொள்கையையே பின்பற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.
வடமாகாணத்தைப் பொறுத்தவரையில் பல காரணங்களினால் தகைமைகள் குறைக்கப்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது என்பதைச் சுட்டிக் காட்டினேன். இது பற்றி உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி தனது செயலாளர் லலித் வீரதுங்கவிற்கு அறிவுரை வழங்கினார்.
இவ்விடயம் எமது ஆளுநருக்குந் தெரியப்படுத்தப்பட்டது என்று அறிகின்றேன். இதன் போதுதான் மேற்படித் தொழிற்சங்கப் போராட்டமும் சென்ற மாதம் 7ந் திகதியளவில் ஆரம்பிக்கப்பட்டது என்று நினைக்கின்றேன்.
ஏனென்றால் இந்தக் காலகட்டத்தில்தான் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களாலும், மாகாணசபை உறுப்பினர்களாலும் இந்த ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக எனக்குத் தெரியப்படுத்தப்பட்டது.
இந் நிலையில் நானும், சுகாதார அமைச்சரும் சந்தித்து நீண்டநேரம் இது பற்றி உரையாடியிருந்தோம். அதன் அடிப்படையில் என் சார்பில் உரிய உறுதிமொழிகளை வழங்கிப் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கைகள் எடுக்குமாறு எமது சுகாதார அமைச்சரை வேண்டிக் கொண்டேன். அவரும் காலதாமதம் இல்லாமல் அடுத்தநாள் எங்கள் அமைச்சர் கூட்டத்தில் இது பற்றித் தெரிவித்து அதற்கடுத்த நாள் மாகாணசபைக் கூட்டத்தில் உங்களைப் பதவியில் நிரந்தரமாக்குவதற்கு ஒரு பிரேரணையைச் சமர்ப்பித்தார்.
அப்பிரேரணை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடின்றி நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலையும் பெற்றது. ஆளுநருக்கு இது சார்பாக எங்கள் நன்றிகளைக் கூறிக் கொள்கின்றேன். இன்று அவையாவற்றின் அடிப்படையிலும் உங்களுக்கான நியமனம் வழங்கப்படுகின்றன.
அதற்காக உரிய பிரயத்தனங்களில் ஈடுபட்டு வெற்றி கண்ட எமது சுகாதார அமைச்சர் போற்றுதலுக்குரியவர். எம் எல்லோரதும் நன்றிக்குப் பாத்திரமானவர். இவ்வாறான நியமனங்களில் எவரேனும் விடுபட்டு உள்ளனரோ நான் அறியேன்.
உங்கள் குறை, நிறைகளை எங்களுக்குக் கூறுங்கள். தாமதமாகியேனும் அவை பற்றி உரிய நடவடிக்கைகளை நாம் எடுப்போம்.
இன்று இங்கு அமைச்சர் ரிஷாட் பதியூதீன் அவர்கள் இக்கூட்டத்தில் பங்குபற்றுவது மனமகிழ்வைத் தருகின்றது. அவரின் சகோதரர் எமது வடமாகாணசபையில் எமக்குப் பலவிதமான அனுசரணைகளை வழங்கி வருகின்றார்.
அண்மையில் நாம் கொண்டுவந்த சில பிரேரணைகளுக்கு அவை திருத்தப்பட்டபின் அவர் தமது ஒத்துழைப்பை நல்கினார். அதிலிருந்து வடமாகாணத் தமிழ்ப் பேசும் மக்கள் சிங்களவர், முஸ்லிம்கள், தமிழர்கள் என்ற பேதம் பார்க்காமல் தமக்கு ஏற்பட்ட அண்மையகால அவலங்கள் சம்பந்தமாக ஒரே கருத்தையே கொண்டிருக்கின்றார்கள் என்று கொள்ளக் கூடியதாக இருந்தது.
இப்பேர்ப்பட்ட ஒற்றுமை எமக்குள் வளரவேண்டும். வடமாகாணத் தமிழ்ப் பேசும் மக்கள் இன வேறுபாடின்றி மனிதாபிமான அடிப்படையில் வாழ்ந்து வருபவர்கள் என்று உலகம் எம்மைப் போற்றும் அளவிற்கு எமது நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றேன்.
அமைச்சர் அவர்களும் அவர் இளைய சகோதரர் பாணியில் எம் எல்லோருக்கும் நல்லதொரு எடுத்துக்காட்டாக இருப்பார் என்று எதிர்பார்க்கின்றோம். கத்தோலிக்க- முஸ்லிம் பிரச்சினைகள், தமிழர் – முஸ்லிம்கள் பிரச்சினைகள், சிங்களவர் – முஸ்லிம்கள் பிரச்சினைகள், சிங்களவர் – தமிழர் பிரச்சினைகள் என்று வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் பலவிதமான பிரச்சினைகள் எழுந்து வருவதை நாம் காண்கின்றோம்.
எமது மத்திய அரசின் மாண்புமிகு அமைச்சர் ரிஷாட் பதியூதீன் அவர்கள் நினைத்தால் அவையாவற்றையும் நீதியும், நியாயமானதுமான முறையில் தீர்த்து வைக்கலாம் என்பது எனது கருத்து.
காரணம் உலகத்தின் மிகப் பலம் வாய்ந்த 500 முஸ்லிம்களில் அவரையும் ஒருவராகத் தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்றால் அவரின் செல்வாக்கை அதிலிருந்து ஊகித்துக் கொள்ளலாம். இன்று இந்தத் தொழிலாளர்கள், அலுவலர்களின் பிரச்சினைகள் எங்கள் கூட்டத்தின் நிமித்தம் தீர்வுகாண்பதுபோல் தொடர்ந்தும் பலபிரச்சினைகளை நாங்கள் சேர்ந்தே தீர்த்து வைக்க அமைச்சர் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் அடுத்த தேர்தலுக்காக எம்முள் பலர் வேலை செய்கின்றார்களே ஒளிய இந்தத் தேர்தலில் எமக்கு வாக்களித்தவர்களுக்கு நாமளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக எமது நடவடிக்கைகள் அமைகின்றதா என்பது சந்தேகமாக இருக்கின்றது.
நாம் யாவரும் சேர்ந்து ஒரு ஐக்கியமான வடமாகாணத்தைக் கட்டி எழுப்ப எல்லோரும் உதவ வேண்டும் என்றார்.