பாராளுமன்றத்தில் கூச்சலிடுவதால் மக்களுக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை!- வி. முரளிதரன்

karuna_amman_002தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பாராளுமன்றத்திலும், மாகாண சபையிலும் எதிர்க்கட்சி ஆசனத்திலிருந்து கொண்டு கூச்சலிடுவதால் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்கப் போவதில்லை என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் எமது மக்கள் இழந்த அபிவிருத்திகளை அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டால் மாத்திரமே கொண்டுவர முடியும் என்றும் அவர் கூறினார்.

காணியற்றவர்களுக்கு அரச காணி வழங்கல் தொடர்பாக மட்டக்களப்பு வந்தாறுமூலை சிவத்தப் பாலம் பகுதியில் நடைபெற்ற விஷேட கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்.

கமநல சேவை திணைக்கள பிரதேச பெரும்பாக உத்தியோகத்தர் எஸ்.கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கமநல சேவை திணைக்கள மாவட்ட உதவி ஆணையாளர் எஸ்.சிவலிங்கம், மீள்குடியேற்ற பிதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் திருமதி பேரின்பமலர் மனோகரதாஸ், பிரத்தியேகச் செயலாளர் பொ.ரவீந்திரன், மீள்குடியேற்ற அதிகார சபை பணிப்பாளர் கே.சத்தியவரதன், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கல்குடா தொகுதி அமைப்பாளர் டிஎம்.சந்திரபாலா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இங்கு பிரதியமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

மஹிந்த சிந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் இலங்கையில் காணியற்றவர்களுக்கு காணி வழங்க வேண்டும் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் அனைவருக்கும் உரிமை உண்டு. அரச காணிகளை பிரித்து வழங்க வேண்டும் என சட்டம் உள்ளது. இது எமது பிரதேச மக்களுக்கு தெரியாது, அரச காணி வழங்குவதை எவரும் தடுக்க முடியாது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒன்பதாயிரம் ஏக்கர் அரச காணியை காணியற்றவர்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தப பிரதேசத்தில் வாழும் மக்களில் அநேகமானோர் சொந்த காணிகளின்றி வாழ்கின்றனர். அவர்களின் நலன்கருதியே இவ்வாறு ஒரு திட்டம் அமுல்படுத்தவுள்ளோம்.

செங்கலடி பிரதேச செயலகப் பிரிவில் 39 கிராமங்கள் உள்ளன. 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். ஒரு பாராளுமன்ற உறுப்பினரை அனுப்பமுடியும். அதனூடாக பல அபிவிருத்திகளைக் கொண்டுவர முடியும். ஆனால் எமது மக்கள் தமது வாக்குரிமையைப் சரியாக பயன்படுத்துவதில்லை.

நான் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதானல்தான் இவ்வாறான மக்களுக்கு பயன்தரும் திட்டங்களை கொண்டுவருகிறோம். ஆனால் எமது பிரதேச மக்கள் தேர்தல் காலங்களில் உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு ஏமாந்து தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்து அபிவிருத்திகளின் பயன்களை அனுபவிக்க முடியாதவர்களாக காணப்படுகின்றீர்கள்.

உங்கள் கிராமத்தைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராஜசிங்கம் கிரான்புல் வடிச்சலைக் கட்டித்தருவேன் என கூறி அரசியல் செய்கிறார். கிரான்புல் வடிச்சல் என்பது ஒரு சாதாரண விடயம் நாங்கள் உறுகாமம் கித்துள் குளங்களை இணைத்து பாரிய நீர்ப்பான திட்டங்களை அமுல்படுத்தவுள்ளோம். மாவட்டத்தில் வெள்ளம் ஏற்படும் பிரதேசங்களில் தடுப்பு அணை கட்டுவதற்கான 1100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்னமும் மக்களை ஏமாற்றி அரசியல் செய்வதை நிறுத்தி மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் அக்கறை செலுத்த வேண்டும். பாராளுமன்றத்திலோ மாகாண சபையிலோ எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்து கொண்டு கூச்சலிடுவதால் எதுவும் நடக்கப் போவதில்லை.

இந்த வருடத்தில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சினூடாக 1168 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மாவட்டத்திலுள்ள மகளீர் அமைப்புகளுக்கு தலா ஒரு இலட்சம் வீதம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மாவட்டத்திலுள்ள 134 ஆலயங்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஒரு இலட்சம் வீதம் வழங்கியுள்ளேன்.

கிழக்கு மாகாண சபையில் என்ன நடக்கிறது என்று கூட தற்போது மக்களுக்கு தெரியாத நிலையில் காணப்படுகின்றனர். அங்கு தமிழர்களுக்கு என ஒரு அமைச்சரை பெறமுடியாத நிலையை எமது மக்கள் உருவாக்கியுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 74 சதவீதம் தமிழ் வாக்குகள் இருந்தும் ஒரு அமைச்சரை உருவாக்க முடியவில்லை.

இந்த விடயத்தில் முஸ்லிம்களை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளவேண்டும். அவர்கள் தேர்தல் காலங்களில் பிரிந்து செயற்பட்டாலும் அரசுடன் இணைந்து அமைச்சு பதவிகளைப் பெற்று அவர்களது சமூகத்திற்கு பாரிய அபிவிருத்திகளை கொண்டுவருகிறார்கள்  என்றார்.

TAGS: