ஐ.நா. மனிதவுரிமை பிரேரணைக்கு எதிராக செயற்படப் போவதாக ரஷ்யாவும், அவுஸ்திரேலியாவும் அறிவிப்பு

russia-australiaஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டு வரப்படும் மனிதவுரிமை மீறல் பிரேரணைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்று அவுஸ்திரேலியா கூறுகிறது.

அவுஸ்திரேலியாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜுலி பிஷோப், சிட்னி மோர்னிங் ஹெரல்ட் செய்தித்தாளுக்கு வழங்கிய பேட்டியிலேயே இதனைத் தெரிவித்தார்.

இலங்கைக்கு எதிரான யுத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று அவசியம் இல்லை என்று அவர் கூறுகிறார்.

யுத்தத்தின் போது தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை மற்றும் யுத்த சூனிய வலயத்தில் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும், ராணுவத்தினருக்கும் எதிராக குற்றச்சாட்டுகள் தொடர்பில் உள்நாட்டு விசாரணையொன்று வேண்டும் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சர்வதேச ரீதியாக விடுக்கப்படும் சவால்களுக்கு ரஷ்யாவின் ஆதரவு இலங்கைக்கு தொடர்ச்சியாக இருக்கும் என்று ரஷ்ய பிரதி சபாநாயகர் சர்ஜி செலெசன்ஜென் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் இலங்கையின் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடியை சந்தித்து கலந்துரையாடிய போதே சர்ஜி இதனை தெரிவித்தார்.

இலங்கை பற்றி சில நாடுகள் கொண்டுள்ள நிலைப்பாடு எந்த தருணத்திலும் சரியானதாக இருப்பதில்லை.

யுத்தத்தின் பின்னர் புனரமைப்பு நடவடிக்கைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனால், பிரச்சினைகள் தொடர்பிலான தீர்மானங்களை எடுக்கும் உரிமை இலங்கைக்கு கிடைக்க வேண்டும் என்று ரஷ்ய பிரதி சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா மனித உரிமைப் பேரவையில் அவுஸ்திரேலியா இலங்கைக்கு ஆதரவு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில், அவுஸ்திரேலியா இலங்கைக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளது.

இலங்கை குறித்த சர்வதேச விசாரணை கோரிக்கைக்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசொப் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்ட இரு தரப்பைச் சேர்ந்தவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி தண்டிக்கப்பட வேண்டும் என இலங்கையை அவுஸ்திரேலியா வலியுறுத்தி வருகின்றது.

எனினும், இம்முறை ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரளிக்கப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியா ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடல்ல என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு அவுஸ்திரேலியா ஆதரவினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், இம்முறை அவுஸ்திரேலியா இலங்கைக்கு ஆதரவாக செயற்பட உள்ளது.

சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு புதிய பிரதமர் டோனி அப்போட் அரசாங்கத்திற்கு, இலங்கை வழங்கி வரும் ஒத்துழைப்பிற்கு பிரதியுபகாரமாக இந்த தீர்மானத்திற்கு எதிராக அவுஸ்திரேலியா செயற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TAGS: