நீலாய் தொடக்கநிலைப் பள்ளியில் பாலியல் உறவு தொடர்பான ஆய்வா?

1 schoolதேசிய  வகை  தொடக்கநிலைப்  பள்ளியில்  பாலியல்  நடத்தைகள்  பற்றி  ஆய்வு  நடத்தி இருக்கிறார்களே,  என்ன  கொடுமை இது   எனக்  குமுறிக்  கொண்டிருக்கிறார்கள்  நெகிரி  செம்பிலான்  மாநில  டிஏபி  சட்டமன்ற  உறுப்பினர்கள்  இருவர்.

ஜே. அருள்குமார் (நீலாய்), பி.குணசேகரன் (செனாவாங்) ஆகிய  அவ்விருவரும் 10 வயது  மாணவர்  ஒருவரின்  தந்தை  அது  பற்றித்  தங்களுக்குத்  தெரியப்படுத்தியதாகக்  கூறினர்,

“இடைநிலைப்  பள்ளி  மாணவர்களிடம்  அந்தக்  கேள்விகளைக்  கேட்டிருந்தால்  அது   பெரிய  விவகாரம்  அல்ல.  ஆனால்,  அதுவும்கூட  கேள்விகளையும்  அவை  எப்படிக்  கேட்கப்படுகின்றன  என்பதையும்  பொறுத்தது”,  என  குணசேகரன்  கூறினார். 

“ஆனால்,  அப்படிப்பட்ட  ஆய்வைத்  தொடக்கநிலைப்  பள்ளி  மாணவர்களிடம்  நடத்துவது  அடியோடு  ஏற்றுக்கொள்ள  முடியாதது.  கேள்விகளைப் பார்த்து  சம்பந்தப்பட்ட  பெற்றோர்  அதிர்ச்சி  அடைந்து  போயுள்ளார். 
“பாலியல் உறவு,  கைமுட்டுப்  பழக்கம்,  ஓரினப்  புணர்ச்சி  பற்றி  அறியாத  மாணவர்கள்  இப்போது  பெற்றோரிடம்  அவை  பற்றிக்  கேட்கத்  தொடங்கி  இருக்கிறார்கள்”,  என்றாரவர். 

கேள்விகள்  அதிர்ச்சி  அளிப்பவையாகத்தான்  இருந்தன  என்று  அருள்குமாரும்  கூறினார்.

இருவரும்  மாநிலக்  கல்வித் துறையிடம்  கேள்விகள்  அடங்கிய  பாரம்  ஒன்றைக்  கொடுத்து  புகார்  செய்துள்ளனர்.

இதனிடையே,  மாநிலக்  கல்வி  இயக்குனர்  கல்சோம்  காலிட்,  இவ்விவகாரம்  குறித்து  விசாரிக்க  அதிகாரி  ஒருவரை  அப்பள்ளிக்கு  அனுப்பி  வைத்திருப்பதாக  தெரிவித்தார்.