இலங்கை அரசு, தமிழ் மக்களுக்கு எதையும் வலிந்து தரப்போவதில்லை: பா.உ.சரவணபவன்

saravanapavan_001இலங்கை அரசு, எங்களுக்கு எதையும் வலிந்து தந்துவிடப் போவதில்லை. எங்களிடம் இருக்கும் வளங்களை நாங்கள் தான் சரியாகப் பயன்படுத்தி எம்மை நாம் தான் வளப்படுத்த வேண்டும் என்று யாழ். மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்

சனசமூக நிலையங்களுக்குப் புத்தகங்கள் கையளிக்கும் நிகழ்வு நேற்று கரவெட்டிப் பிர தேச செயலகத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,

நாங்கள் போரில் இருந்து வெளி வந்த இனம். போருக்குள் வாழ்ந்த பிரதேசம். ஆனால் இன்று போருக்குள் வாழ்ந்த இனம் என்பது மறைக்கப்படுகிறது.

இலங்கையில் எல்லோரும் சமம் என்று கூறி வருகிறார்கள். ஆனால் தெற்கு, வடக்கு என்ற பாகுபாடு காட்டப்படுகிறது. எமது இன மாணவர்கள் மத்தியில் இன்று விஞ்ஞான அறிவு வெகுவாகக் குறைந்து வருகிறது.

கடந்த வருடம் தாதியர் பயிற்சிக்கு 2000 விண்ணப்பங்கள் கோரப்பட்டன. ஆனால் வடக்கில் இருந்து ஒருவர் மட்டுமே விண்ணப்பித்து இருந்தார். இதிலிருந்து எமது இனம் விஞ்ஞான ரீதியாக எந்தளவுக்குப் பின் தங்கிய நிலையில் இருப்பதை எம்மால் அறியமுடிகிறது. எனவே இளைய சமுதாயத்தை இத்தகைய துறையில் முன்னேற்ற வேண்டியது அவசியமாகும் என்று தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினரின் பண்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவுத் திட்டத்தில் கரவெட்டிப் பிரதேச செயலகத்துக்கு 3 இலட்சத்து 55 ஆயிரம் ரூபா நிதி, 38 வேலைத்திட்டங்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட நிலையில், நேற்றைய தினம் கரவெட்டி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட 10 சனசமூக நிலையங்களுக்கு தலா 20 ஆயிரம் பெறுமதியான புத்தகங்கள் வழங்கப்பட்டன.

கரவெட்டி பிரதேச செயலர் எஸ். சிவஸ்ரீ, கரவெட்டி பிரதேச சபைத் தலைவர் பொ.வியாகேசு, பருத்தித்துறை பிரதேச சபைத் தலைவர் பூ.சஞ்சீவன் உட்பட சனசமூக நிலையத் தலைவர்களும் இதில் கலந்து கொண்டனர்.

TAGS: