லிபியா மற்றும் ஈராக் போன்று இலங்கையையும் மாற்ற தீய சக்திகள் முயற்சி!– அமைச்சர் பீரிஸ்

peirisலிபியா மற்றும் ஈராக் போன்ற நாடுகளைப் போன்று இலங்கையிலும் ஊடுறுவுவதற்கு சில தீய சக்திகள் முயற்சித்து வருவதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சில சர்வதேச சக்திகள் இலங்கைக்குள் செய்ய முடியாதவற்றை வெளிநாடுகளில் இருந்து கொண்டே மனித உரிமையைக் கருவியாகப் பயன்படுத்தி, செய்ய முயற்சிக்கின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

லிபியாவில் அந்நாட்டு அதிபர் முஹம்மர் கடாபி ஓர் நாயைப் போன்று கொலை செய்யப்பட்டதாகவும், ஈராக்கில் அந்நாட்டு ஜனாதிபதியை பலவந்தமாக பதவி விலக்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் சேவையாற்றிய தலைவர்களை, வெளிநாட்டு சக்திகள் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்து பதவி கவிழ்த்துள்ளன.

நாட்டின் வளங்களை அபகரித்துக் கொள்ளும் நோக்கில் இவ்வாறு உள்நாட்டில் பிரச்சினைகளை ஏற்படுத்த சில சக்திகள் முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இலக்கு ஒன்று இருந்தால் அதனை அடைவது முடியாத காரியமல்ல என்பதனை யுத்தத்தை முடிவுறுத்தி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உலகிற்கு பாடம் புகட்டியுள்ளார் என வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் சவால்கள் காரணமாக இலங்கை மக்கள் சமாதானத்தை முழுமையாக அனுபவிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாஙகத்தை கவிழ்க்கும் நோக்கில் சர்வதேச சக்திகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் தீர்மானம் நிறைவேற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

TAGS: