சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகத்தின் (பிகேஎன்எஸ்) ஒப்பந்த ஊழியர்கள் பணி நிறுத்தம் செய்யப்பட்டது தொடர்பில் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிமும் பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலியும் சச்சரவிட்டுக் கொள்வதை நிறுத்த வேண்டும் என்று எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார்.
மாநில அரசு அந்த ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பில் அஸ்மின் ஆத்திரப்பட்டிருக்க வேண்டியதில்லை என அன்வார் கூறினார்.
“அதற்கு அஸ்மின்தான் காரணம் என்று காலிட் கூறவே இல்லை. அவ்விவகாரத்தை ஆராய்வதாக சொன்னாரே தவிர அஸ்மின் பெயரை அவர் இழுக்கவே இல்லை”, என்றாரவர்.
அவர்களின் சச்சரவைத் தடுக்க அவர் எதுவும் செய்யவில்லை என்று கூறப்படுவதை அன்வார் மறுத்தார்.
“கடுமையான முறையில் அறிவுறுத்தி இருக்கிறேன். அது பற்றி விவரிக்கப்போவதில்லை”, என்றவர் தெரிவித்தார்..