சிறிலங்காவில் பெண்களின் நிலை – அமெரிக்க அதிகாரி கவலை

Catherine-Russellசிறிலங்காவை விமர்சிப்பதற்காகவே, தான் அங்கு பயணம் செய்யவிருந்ததாக, சிலர் எண்ணுவதாகவும், ஆனால், தனது நோக்கம் அதுவல்ல என்றும் தெரிவித்துள்ளார், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் பெண்கள் விவகாரங்களுக்கான சிறப்புத் தூதுவர் கத்தரின் ருசெல்.

சிறிலங்காவினால், நுழைவிசைவு மறுக்கப்பட்ட, கத்தரின் ருசெல் அம்மையார், நேற்று கொழும்பிலுள்ள அமெரிக்கன் நிலையத்தில், உள்ளூர் பெண்கள் உரிமை மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் காணொலி மூலம் கலந்துரையாடல் நடத்தினார்.

இதன்போது அவர், சிறிலங்காவுக்கு உதவுவதில் அமெரிக்கா இன்னமும் உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளில் பெண்களின் நலவாழ்வுக்காக, 40 மில்லியன் டொலர் சிறிலங்கா அரசாங்கத்திடம் வழங்கப்பட்டு, அதுதொடர்பான திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

பெண்களின் முழுமையான பங்களிப்பின் மூலமே, உலக அமைதி, செழுமை, பொருளாதார அபிவிருத்தி ஆகியவற்யை அடைய முடியும் என்ற ஒபாமா நிர்வாகத்தின் செய்தியை தனது பயணத்தின் மூலம் எடுத்துக் கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால், தனது சிறிலங்கா பயணத்தின் போது, சுட்டிக்காட்டிய, ஊழல்கள் மலிந்து போயிருப்பது, தண்டனை விதிக்கப்படாமை, ஆகியன குறித்த கவலைகள், பெண்களின் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கத்தரின் ருசெல் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் சட்டத்தின் ஆட்சி பலவீனப்பட்டுள்ளது, பாலியல் தொடர்பான வன்முறை வழக்குகளில் நீதி வழங்கப்படுவதில் உள்ள குறைபாடுகள், பாலியல் வன்முறை மற்றும் பாலியல் வன்புணர்வு வழக்குகள் இழுத்தடிக்கப்படுவது, குறித்து கவலை வெளியிட்டுள்ள அவர், சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான பலமான திட்டம் சிறிலங்காவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

“சிறிலங்காவில் பாலியல் வன்புணர்வு மற்றும் பாலியல் வன்முறைகள் அதிகரித்திருப்பது குறித்து நாம் ஆழமான கவலை கொண்டுள்ளோம்” என்றும் கத்தரின் ருசெல் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள சிவில் அமைப்புகள் மற்றும் பெண்கள் உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்த காணொலிக் கலந்துரையாடலில், போருக்குப் பிந்திய சூழலில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து, உள்ளூர் பிரதிநதிகள் கத்தரின் ருசெல்லுக்கு எடுத்துக் கூறியுள்ளனர்.

வடக்கில் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ள சூழல், போரினால் வாழ்க்கைத் துணையை இழந்த பெண்களின் வாழ்வாதாரத்துக்கு காத்திரமான உதவிகளை வழங்குதல், போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகரித்துள்ள வீட்டு வன்முறைகளில் இருந்து பெண்களைப் பாதுகாத்தல், குறித்தும் இதன்போது முக்கியமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் தேசியவாத எழுச்சி குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இதனால், பெண்கள் தொடர்பான கொள்கைகளில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

TAGS: