இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தப்படும்! பிரித்தானிய உயர்ஸ்தானிகர் செவ்வி

John-Rankinஇலங்கை தொடர்பில் ஜெனீவாவில் சர்வதேச விசாரணை அவசியமெனக் கோரிக்கை விடுக்கவுள்ளதாக  பிரித்தானியா தெரிவித்துள்ளது.

இலங்கை அரசு உள்ளக விசாரணையை நடத்தாத பட்சத்தில் சர்வதேச விசாரணை நடத்தப்படும் என்று இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ராங்கின் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தப் பிரச்சினை தொடர்பில் முதலில் தெளிவாகவும் நட்பு ரீதியாகவும் அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை முன்னெடுக்க வேண்டும். வட அயர்லாந்தின் அனுபவங்களை எடுத்துக்கொண்டால் ருவாண்டா மற்றும் சியேராலியோன் போன்ற நாடுகளில் சுயாதீன விசாரணைகள் இடம்பெற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நீண்டகால நல்லிணக்கம் மற்றும் உறுதியான ஸ்திரத்தன்மை போன்ற விடயங்களுடன் சிந்தித்து அரசாங்கம் இது தொடர்பில் செயற்பட வேண்டும். அதேபோன்று, சர்வதேச பொறிமுறையொன்றின் ஊடாக இந்த பிரச்சினையில் தலையீடுகளை மேற்கொள்ள ஏனைய நாடுகளால் முடியும் என அவர் குறிப்பிட்டார்.

அத்துடன்,  ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் தான் இது தொடர்பில் கடந்த இரண்டு தடவையும் ஆதரவாக பிரித்தானியா வாக்களித்தது. இந்த விவாதம் எதிர்வரும் மார்ச் மாதத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

எமது இராணுவம் பாரியளவில் குற்றங்கள் புரிந்துள்ளமை தொடர்பில் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் செயற்பட்டோம். அதேபோன்று, உள்ளக தேசிய விசாரணையொன்றும் முன்னெடுத்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் ஆப்கானிஸ்தானில் எமது நாட்டு இராணுவம் புரிந்த குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தோம். இவ்வாறு தேசிய விசாரணைகள் முன்னெடுக்கப்படாவிடின் இந்தக் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச பொறிமுறை முன்னெடுக்கப்படும் எனவும் இதன்போது அவர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு எதிரான தடைகளுக்கு பிரித்தானியா ஆதரவு வழங்குமா? என்று கேள்வி எழுப்பப்பட்ட போது இதனை யாரும் செய்ய மாட்டார்கள். எனது அறிவிற்கு எட்டிய வகையில் சர்வதேச சமூகம் கேள்விகளை எழுப்புவது இலங்கைக்கு எதிராக தடைகளை விதிக்க அல்ல என அவர் பதில் அளித்தார்.

TAGS: